
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 1 – 1* என்ற கணத்தில் சமநிலையில் இருக்கும் அந்தத் தொடரின் நான்காவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தின் அடுத்த நாளில் மெல்போர்ன் நகரில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 19 வயது இளம் வீரர் சாம் கோன்ஸ்டஸ் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக 7வது ஓவரின் முதல் 2 பந்துகளில் 4, 6 அடித்த அவர் 4வது பந்தில் மீண்டும் சிக்ஸர் அடித்து மொத்தமாக 18 ரன்களை குவித்தார். இதன் வாயிலாக ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக இருக்கும் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு எதிராக 3 வருடங்கள் கழித்து சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கோன்ஸ்டஸ் படைத்தார்.
பொதுவாக துல்லியமாக வீசக்கூடிய பும்ரா கடைசியாக வீசிய 4484 பந்துகளில் ஒரு முறை கூட சிக்ஸர் கொடுத்ததில்லை. ஆனால் இப்போட்டியில் ஒரே ஓவரில் அவருக்கு எதிராக 2 சிக்ஸர்கள் அடித்து கோன்ஸ்டஸ் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அது போக பும்ராவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் (18) அடித்த வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.
அந்த வகையில் மிரட்டலாக பேட்டிங் செய்த அவர் கவாஜாவுடன் சேர்ந்து 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதமடித்து 60 (65) ரன்களில் அவுட்டானார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது இளம் வயதில் அரை சதமடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையையும் கோன்ஸ்டஸ் படைத்தார். 19 வருடம் 85 நாட்களில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் 1948ஆம் ஆண்டு 19 வருடம் 121 நாட்களில் நெய்ல் ஹார்வி அரை சதம் அடித்ததே முந்தைய சாதனை. அந்த வகையில் பாக்ஸிங் டே நாளில் அட்டகாசமாக விளையாடிய அவர் ரசிகர்களின் பாராட்டுக்கு மத்தியில் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து நடைபெறும் போட்டியில் மறுபுறம் நகரமாக விளையாடும் உஸ்மான் கவாஜாவும் அரை சதமடித்து சவாலை கொடுக்கிறார்.
இதையும் படிங்க: என்னோட கரியர்ல நிறைவேறாத ஆசைன்னா அது இதுமட்டும் தான் – ரவிச்சந்திரன் அஷ்வின் வெளிப்படை
அவருடன் மார்னஸ் லபுஸ்ஷேன் நிதானமாக விளையாடுகிறார். அதனால் இந்தப் பதிவிடும் போது ஆஸ்திரேலியா 138-1 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தைப் பெற்றுள்ளது. மறுபுறம் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் பிட்ச்சில் இந்தியா விக்கெட்டுகளை எடுக்க முயற்சித்து வருகிறது