ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கியது. அதில் மார்ச் 23ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. அந்தப் போட்டிக்காக ரசிகர்களிடம் உச்சகட்டை எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் சென்னையும் மும்பையும் தலா 5 கோப்பைகளை வென்று வரலாற்றின் வெற்றிகரமான ஐபிஎல் அணிகளாக சாதனை படைத்துள்ளன.
இம்முறையும் அவ்விரு அணிகளில் உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள். எனவே அந்தப் போட்டியில் வெற்றி பெறுவதற்கு இரு அணிகளும் மோதும் போது அனல் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த வருடம் சிஎஸ்கே அணிக்காக மீண்டும் இங்கிலாந்தை சேர்ந்த இளம் ஆல் ரவுண்டர் சாம் கரண் விளையாட உள்ளார்.
விடியவிடிய பயிற்சி:
2020, 2021 ஆகிய வருடங்களில் சென்னை அணிக்காக விளையாடிய அவர் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி சுட்டிக்குழந்தை என்று சிஎஸ்கே ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றார். அதன் பின் பஞ்சாப் அணியில் தடுமாற்றமாக விளையாடிய அவர் மீண்டும் இந்த வருடம் சென்னை அணிக்காக விளையாட உள்ளார். இந்நிலையில் முதல் போட்டியில் மும்பையை எதிர்கொள்வதற்காக தோனி தலைமையில் இரவு 11.30 மணி வரை பயிற்சிகளை எடுப்பதாக சாம் கரண் கூறியுள்ளார்.
மேலும் எவ்வளவு பதற்றம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாத தோனி அன்றும் இன்றும் கூலாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் சாம் பேசியது பின்வருமாறு. “நேற்று எம்எஸ் மற்றும் ஜடேஜா ஆகியோருடன் இரவு 11.30 மணி வரை பேட்டிங் செய்தேன். இந்த உலகில் எங்கே இப்படி பயிற்சி எடுப்பார்கள் என்று நான் நினைத்தேன்”
கூலான தோனி:
“ஏனெனில் அந்த நேரத்தில் மைதானத்தின் ராட்சத மின் விளக்குகள் எரிந்தன. நாங்கள் பந்தை அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கினோம். எங்களைச் சுற்றியிருந்த லோக்கல் வீரர்கள் தோனி பேட்டிங் செய்ததை உட்கார்ந்து பார்த்தனர். அதுவே அவருடைய ஒளியாகும். பெரிய தருணங்களில் பொறுமையாக இருக்கக்கூடிய அவர் பேசுவதற்கு எளிமையானவர்”
இதையும் படிங்க: சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் தல தோனி – சேப்பாக்கத்தில் காத்திருக்கும் சம்பவம்
“ஆனால் எப்போதும் பதற்றமாக இருந்து பார்க்க முடியாது. அவருடைய முகத்தில் உணர்வுகள் இருப்பது போலத் தெரியும். ஆனால் அவர் அதைக் காட்ட மாட்டார். ஹோட்டலிலும் அவர் தன்னுடைய அறையை அனைத்து நேரங்களிலும் திறந்து வைத்து மற்ற வீரர்களுடன் கால்பந்து, கிரிக்கெட்டில் விளையாடுவதைப் பற்றி பேசுவார். அதே சமயம் அவரால் ஹோட்டலை விட்டு வெளியே வர முடியாது. ஏனெனில் அவரைச் சுற்றி கும்பல் வந்து விடும்” என்று கூறினார்.



