விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக ஐக்கிய நாடுகளின் வரலாற்றில் 15ஆவது முறையாக நடைபெற்ற ஆசிய கோப்பையை யாருமே எதிர்பாராத வகையில் இளம் வீரர்களை வைத்து அட்டகாசமாக செயல்பட்ட இலங்கை வென்று சாதனை படைத்தது. இத்தனைக்கும் தரவரிசையில் 8வது இடத்தில் திண்டாடும் அந்த அணி துபாய் மைதானத்தில் டாஸ் தோற்றும் 58/5 என பேட்டிங்கில் தடுமாறியும் அதிலிருந்து மீண்டெழுந்து அற்புதமாக செயல்பட்டு மறுமலர்ச்சி வெற்றியை கண்டுள்ளது. மறுபுறம் இலங்கையை விட தரமான வீரர்களை கொண்ட பாகிஸ்தான் டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் சொதப்பி வெறும் கையுடன் வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் கடுப்பாக வைத்துள்ளது.
குறிப்பாக அழுத்தமான பைனலில் உலகின் டாப் 2 பேட்ஸ்மேன்களான முஹம்மது ரிஸ்வான், பாபர் அசாம் ஆகியோரை வைத்திருந்தும் 171 ரன்களை துரத்த முடியாத அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்கு சுருண்டது. மேலும் பந்து வீச்சின் போது கடைசி நேரத்தில் 71* (45) ரன்களை விளாசி வெற்றியை பறித்த பனுக்கா ராஜபாக்சா கொடுத்த அழகான கேட்சை எளிதாக பிடிப்பதை கோட்டை விட்டு ஒருவரை ஒருவர் மோதிக்கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் ஆசிஃப் அலி மற்றும் சடாப் கான் ஆகியோர் 6 ரன்கள் கொடுத்தது மட்டுமல்லாமல் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொண்டனர்.
ட்விட்டர் நாடகம்:
மேலும் பொதுவாகவே இதுபோன்ற தோல்விக்குப் பின் அந்தந்த அணிகளைச் சேர்ந்த வீரர்களும் நிர்வாகமும் ரசிகர்களை ஆறுதல் செய்வதற்காக சமூக வலைதளங்களில் ஏதாவது பதிவிடுவார்கள். அந்த வகையில் பைனலில் கேட்சை கோட்டை விட்ட பாகிஸ்தான் வீரர் சடாப் கான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “மன்னிக்கவும், கேட்ச்கள் போட்டியை வென்று கொடுக்கும். இந்த தோல்விக்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். இருப்பினும் நசீம் சா, முகமத் நவாஸ், ஹரிஷ் ரவூப் ஆகியோர் அடங்கிய பந்துவீச்சு கூட்டணி அபாரமாக செயல்பட்டது. முஹம்மது ரிஸ்வான் கடுமையாக போராடினார். எங்களது மொத்த அணியும் முடிந்தளவு போராடியது, இலங்கைக்கு வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் மற்றொரு பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி இதற்கு முந்தைய போட்டிகளில் சடாப் கான் பிடித்த அற்புதமான கேட்ச்கள் அடங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அவருடைய திறமையை பாராட்டி ஆதரவு தெரிவித்தார். இதை பார்த்து கடுப்பான முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் களத்தில் சிறப்பாக செயல்படாததால் கடுப்பான ரசிகர்களை ஆறுதல் செய்வதற்காக அனைத்து பாகிஸ்தான் வீரர்களின் சமூக வலைதள கணக்கை கையகப்படுத்தி பாகிஸ்தான் அணியின் மேனேஜர் தான் இது போன்ற நாடக பதிவுகளை பதிவிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
பாதி பாகிஸ்தான் வீரர்களுக்கு ட்வீட் போடவே தெரியாது என்று கூறும் அவர் இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “இதில் வேடிக்கையான விஷயம் என்னவெனில் அந்த அனைத்து வீரர்களுக்கும் ஒரு மேனேஜர் தான் உள்ளார். அவர் ஒரு வீரரைப் பற்றி நல்லபடியாக பதிவிட்டு மற்றொரு வீரரின் கணக்கிலிருந்து அவருக்கு பாராட்டு தெரிவிப்பது போல் சுழற்சி முறையில் பதிலளிக்கிறார்”
“இங்கே ஒரு வீரர் தனது தவறை ஒப்புக் கொள்ளும் நிலையில் மற்றொரு வீரர் இல்லை நண்பா நீ சிறப்பாக விளையாடினாய் என்று பதிலளிக்கிறார். ஆனால் இவை அனைத்தும் ஒரு மேனேஜரால் செய்யப்பட்டது. ஏனெனில் பாகிஸ்தான் அணியில் உள்ள பாதி வீரர்களுக்கு மேல் ட்வீட் எழுதுவது பற்றி முற்றிலும் தெரியாது என்று நான் பந்தயம் கட்டுவேன். மேலும் பைனலில் ஏற்பட்ட அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் சொதப்பியதே தோல்விக்கு காரணமாகும். அதுபோக கடந்த சில வருடங்களாக அரைசதம் கூட அடிக்காமல் சுமாரான பார்மில் இருக்கும் வீரர்கள் இந்த தொடரில் விளையாடியது தோல்வியை கொடுத்தது” என்று கூறினார்.
தோல்வியை மறைக்க ரசிகர்களை ஆறுதல் படுத்துவதற்காக பாகிஸ்தான் அணி நிர்வாகம் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவதாக கூறியுள்ள சல்மான் பட் பாகிஸ்தான் அணி நிர்வாகத்தின் முகத்திரையை கிழிக்கும் வகையில் வெளிப்படையாக பேசியது நிறைய ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைக்கிறது. இதைப் பார்க்கும் நமக்கே ரசிகர்களை சமாளிக்க இப்படியும் ஒருவேளை பின்புலத்தில் நடைபெறுமா என்று ஆச்சரியப்பட வைக்கிறது.



