ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சுமாராக செயல்பட்டது அந்நாட்டு ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. முதலில் கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்காவிடம் முதல் போட்டியிலேயே திண்டாட்டமாக விளையாடிய அந்த அணி சூப்பர் ஓவரில் தோற்று அவமானத்தை சந்தித்தது. அதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் பரம எதிரி இந்தியாவை 119 ரன்களுக்கு சுருட்டிய பாகிஸ்தான் வெல்லும் என்று நம்பப்பட்டது.
ஆனால் தங்களுடைய பந்து வீச்சில் அனலாக செயல்பட்ட இந்தியா 20 ஓவரில் பாகிஸ்தானை 113/7 ரன்களுக்கு சுருட்டி மறக்க முடியாத வெற்றி பெற்றது. அதனால் பெரிய பின்னடைவை சந்தித்த பாகிஸ்தான் 3வது போட்டியில் கனடாவை வீழ்த்தியது. இருப்பினும் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் வென்றாலும் பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியாக காணப்படுகிறது.
காசு கொடுத்து:
இந்நிலையில் இந்த தோல்விகளுக்கு கேப்டன் பாபர் அசாம் முக்கிய காரணமாக இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் விமர்சித்துள்ளார். அத்துடன் பாபர் அசாம், ஷாஹின் அப்ரிடி ஆகியோர் காசு கொடுத்து ஒரு தரப்பு ரசிகர்களை தங்களை விராட் கோலி, பும்ரா ஆகியோருடன் ஒப்பிட வைத்துள்ளதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு.
“நம் கேப்டன் கிங் என்றும் மற்றவர் தன்னை உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்றும் சுய பிரகடனம் செய்து கொள்கின்றனர். சில நேரங்களில் இவர்களை நாம் பும்ரா மற்றும் கோலி ஆகியோருடன் ஒப்பிடுகிறோம். ஒருமுறை நீங்கள் ஐசிசி தரவரிசையில் டாப் இடத்தை தொட்டதால் அவ்வாறு ஒப்பிடுவது பரவாயில்லை. ஆனால் சில நேரங்களில் நீங்கள் நிதர்சனத்தையும் தொட்டுப் பார்க்க வேண்டும்”
“அதாவது நீங்கள் உங்களுடைய சொந்த வழியில் வெற்றியை பெற்றுக் கொடுக்கிறீர்களா? அணிக்காக நிற்கிறீர்களா? எனவே இது போன்ற ஒப்பீடுகள் போலியான யூடியுப் வீடியோவை திறந்து பார்ப்பதற்காக வேண்டுமென்றே வைக்கப்படும் தம்ப்னைல் போன்றதாகும். சமூகவலைதளங்களில் ஒரு மோசமான விஷயம் என்னவெனில் காசு கொடுக்கும் பிரச்சாரங்களால் உங்களால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும்”
இதையும் படிங்க: 111/3 டூ 134/8.. நெதர்லாந்தை வீழ்த்திய வங்கதேசம்.. எதிரி இலங்கையை வீட்டுக்கு அனுப்பிய சம்பவம்.. சூப்பர் 8 சென்றதா?
“எனவே இந்த சுய பிரகடனங்களை நாம் மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து அவர்கள் யார் என்பதை சொல்ல வேண்டும். முதலில் நீங்கள் போட்டியை வெல்லுங்கள், பெரிய தொடரில் வெற்றியை பெற்றுக் கொடுங்கள், பெரிய அணிக்கு எதிராக வெற்றியை பெற்றுக் கொடுங்கள், தனி ஒருவனாக ஃபினிஷிங் செய்து காட்டுங்கள். பின்னர் உங்களை கிங் என்று பிரகடனம் செய்யுங்கள்” எனக் கூறினார். மேலும் பாகிஸ்தானை விட இந்தியா ஒவ்வொரு வருடமும் முன்னேறி வருவதாகவும் அவர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



