ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்குகிறது. உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாய் எதிர்கொள்கிறது. மறுபுறம் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி தங்களுடைய சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.
அதே போல பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் நடைபெறும் போட்டியில் இந்தியாவை எப்படியாவது பாகிஸ்தான் தோற்கடிக்க வேண்டும் என்பதை அந்நாட்டு ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லாவிட்டால் அதில் என்ன பயன்? என பாகிஸ்தான் துணை கேப்டன் சல்மான் ஆகா தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்தியாவிடம் தோற்று கோப்பையை தக்க வைத்தால் அதை விட பெரிய சாதனை இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா முக்கியமல்ல:
இருப்பினும் ரசிகர்களுக்காக இந்தியாவையும் வீழ்த்தி கோப்பையை வெல்ல முயற்சிப்போம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பாகிஸ்தான் வாரியத்தின் யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “சாம்பியன்ஸ் டிராபிக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். பாகிஸ்தான் இந்த தொடரை நடத்துவது மிகவும் ஸ்பெஷல். லாகூரில் இருந்து வரும் எனக்கு கோப்பையை எனது சொந்த மண்ணில் வெல்வது கனவு நிஜமான தருணமாக இருக்கும்”
“பாகிஸ்தான் அணியில் கோப்பையை வெல்வதற்கான திறன் இருக்கிறது. இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளில் சூழ்நிலைகள் வித்தியாசமாக இருக்கும். அவர்கள் சொல்வது போல அது உலகின் மிகப்பெரிய போட்டி. ஆனால் அது ஒரு போட்டி மட்டுமே. சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வதே அந்த ஒரு போட்டியை வெல்வதை விட முக்கியமானதாகும்”
கோப்பையே முக்கியம்:
“ஒருவேளை அந்தப் போட்டியை வென்று சாம்பியன்ஸ் டிராபியில் தோற்றால் அது நன்றாக இருக்காது. அல்லாவின் கருணையால் இந்தியாவிடம் தோற்றாலும் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றால் அதுவே பெரிய விஷயமாகும். ஆனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் நாங்கள் வெல்ல முயற்சிப்போம். அவர்களுக்கு எதிராக எனது சிறந்த செயல்பாடுகளைக் கொடுப்பேன்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: 18 வருஷம் 0 கோப்பை.. இதான் மரியாதை .. பின்னால் நிற்கும் கோலியே ஆர்சிபி கேப்டனா வந்துருக்கலாம்.. கைப் பேட்டி
முன்னதாக நேற்று முன்தினம் தங்களுடைய சொந்த மண்ணில் நிறைவு பெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணியிடம் பாகிஸ்தான் தோற்றது. மேலும் 2023 ஆசிய கோப்பை, 2023 உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பைகளிலும் பாகிஸ்தான் அணியை அடித்து நொறுக்கி இந்தியா வென்றது. எனவே 2017 ஃபைனல் தோல்விக்கு பதிலடி கொடுத்து இம்முறையும் பாகிஸ்தானை செயலால் வீழ்த்த இந்தியா தயாராகி வருகிறது.



