ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா 9வது முறையாக கோப்பையை வென்றது. அந்தப் போட்டியின் முடிவில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மற்றும் ஆசிய கவுன்சில் தலைவர் மோசின் நக்வி தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஆனால் அவருடைய கையால் இந்திய அணி கோப்பையை வாங்காது என்று கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்து விட்டார்.
அதனால் அங்கிருந்து அவமானத்துடன் கிளம்பிய நக்வி நீங்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை பார்க்கிறேன் என்ற வகையில் ஆசியக் கோப்பையையும் கையோடு எடுத்துச்சென்று விட்டார். மறுபுறம் வேறு யாருடைய கையிலாவது ஆசியக் கோப்பை பரிசாக வழங்கப்படும் என்று இந்திய அணி சுமார் 45 நிமிடங்கள் காத்திருந்தனர். கடைசியில் இந்தியா கோப்பையை வாங்க மறுத்து விட்டதால் அதை வழங்கவில்லை என்று ஆசிய கவுன்சில் சார்பில் அறிவிக்கப்பட்டது.
யார் ஸ்டார்ட் பண்ணா:
இருப்பினும் அதற்கெல்லாம் அசராத இந்திய அணி கோப்பை கையில் இருப்பது போல கொண்டாடி நக்வி’க்கு பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் இத்தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளின் முந்தைய நாள் பாகிஸ்தான் செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்தது ஏன்? நக்வி கோப்பையை கொடுக்காமல் சென்றது ஏன்? என்று பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு இந்தியா தான் தங்களிடம் கைகுலுக்காமல் அனைத்து பிரச்சினைகளையும் ஆரம்பித்ததாக சல்மான் தெரிவித்தார்.
மேலும் விளையாட்டில் அரசியலை கலக்கும் இந்தியா கிரிக்கெட்டுக்கு கலங்கத்தை அவமானத்தையும் செய்திருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “எங்களுடைய செயல்கள் அனைத்தும் இத்தொடரின் ஆரம்பத்தில் என்ன நடந்தது என்பதற்கான பதில் விளைவுகளாகும். நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். ஆனால் அனைத்தையும் துவங்கியது யார்? என்பதையும் பாருங்கள்”
பாகிஸ்தான் கேப்டன் விமர்சனம்:
“ஆசிய கவுன்சில் தலைவர் அங்கே கோப்பையை கொடுப்பதற்காக இருந்தார். அவரிடம் கோப்பையை வாங்க விரும்பாவிட்டால் பின்னர் அதை நீங்கள் எப்படி வாங்குவீர்கள்? பாகிஸ்தான் செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணித்தது பற்றி நீங்கள் பேசுகிறீர்கள். அவை அனைத்தும் களத்தில் நடந்த விஷயங்களால் பதிலுக்கு நிகழ்ந்ததாகும். இத்தொடரில் நடந்த விஷயங்கள் ஏமாற்றத்துக்குரியது. எங்களுடன் கை கொடுக்காத அவர்கள் (இந்தியா) எங்களுக்கு அவமரியாதை செய்தனர்”
இதையும் படிங்க: இத்தனை வருஷமா நான் கிரிக்கெட் விளையாடி கத்துக்கிட்டது இதுதான் – சஞ்சு சாம்சன் மகிழ்ச்சி
“இன்று கோப்பையை வாங்க மறுத்த அவர்கள் செய்ததைப் போல எந்த நல்ல அணியும் செய்யாது. ஒரு நல்ல அணி நல்லபடியாகவே நடந்து கொள்ளும். அதனாலேயே நாங்கள் மெடலை வாங்க காத்திருந்தோம். அவர்கள் (இந்தியா) விளையாட்டில் செய்யும் விஷயங்கள் பற்றி நான் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால் இது மிகவும் அவமரியாதையானது. அவர்கள் கிரிக்கெட்டை அவமரியாதை செய்கிறார்கள்” என்று கூறினார்.



