ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி கொல்கத்தா நகரில் 39வது போட்டி நடைபெற்றது. அதில் கொல்கத்தா தங்களுடைய சொந்த ஊரில் டாஸ் வென்ற குஜராத்துக்கு எதிராக முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் கேப்டன் – சுப்மன் கில் ஆகியோர் ஜோடி சேர்ந்து ஆரம்பத்திலேயே நேர்த்தியாக விளையாடினர்.
பவர் பிளே கடந்தும் கொல்கத்தா பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு அதிரடிக் காட்டிய அந்த ஜோடி குஜராத்துக்கு அபார துவக்கத்தைக் கொடுத்தது. அந்த வகையில் 13 ஓவர்கள் வரை நங்கூரமாக விளையாடிய இந்த ஜோடி 114 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அப்போது சாய் சுதர்சன் அரை சதத்தை அடித்து 52 (36) ரன்கள் அடித்து ரசல் வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.
குஜராத் அசத்தல்:
அவருடன் சேர்ந்து விளையாடிய கில் அரை சதத்தை அடித்தார். தொடர்ந்து அசத்தலாக விளையாடிய அவர் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 90 (55) ரன்னில் வைபவ் அரோராவிடம் விக்கெட்டை இழந்தார். எதிர்ப்புறம் வந்த ராகுல் திவாட்டியா வந்த வாக்கிலேயே 0 ரன்னில் ஹர்ஷித் ராணா வேகத்தில் நடையைக் கட்டினார்.
இருப்பினும் 3வது இடத்தில் களமிறங்கி இருந்த ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். டெத் ஓவர்களில் 8 பவுண்டரிகளை பறக்க விட்ட அவர் 41* (23) ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். இறுதியில் தமிழக வீரர் சாருக்கான் 11* (5) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் குஜராத் 198-3 ரன்கள் எடுத்தது.
சுதர்சன் சாதனை:
இந்தப் போட்டியில் அடித்த ரன்களையும் சேர்த்து தமிழக வீரர் சாய் சுதர்சன் இதுவரை குஜராத்துக்காக 8 போட்டிகளில் 417* ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக 2025 ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் நிக்கோலஸ் பூரானை முந்திய அவர் முதலிடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை தனதாக்கியுள்ளார். 2வது இடத்தில் பூரான் 368 ரன்களுடன் உள்ளார்.
இதையும் படிங்க: கம்பீருக்காக அபிஷேக் நாயரை பலி கிடாவாக்கிய பிசிசிஐ.. ரோஹித், ராகுல் கருத்தை ஆதரமாக ரசிகர்கள் விமர்சனம்
இது போக ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற சாதனையை அவர் சுப்மன் கில்லுடன் சேர்ந்து படைத்துள்ளார். அவர்கள் இருவரும் இதுவரை 6 முறை 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார்கள். இதற்கு முன் ராகுல் – மயங் அகர்வால், கௌதம் கம்பீர் – ராபின் உத்தப்பா தலா 5 முறை 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது முந்தைய சாதனை.



