தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோற்ற இந்தியா 2வது தோல்வியிலும் தோல்வியை நோக்கிச் செல்கிறது. அப்போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 489 ரன்கள் குவித்து அடுத்த இந்தியாவை 201 ரன்களுக்கு சுருட்டி வீசியது. அடுத்ததாக விளையாடும் தென்னாப்பிரிக்கா 3வது நாள் முடிவில் 314 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதால் இந்தியா வெற்றி பெறுவது கடினமாகியுள்ளது.
முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 3வது இடத்தில் விளையாடும் பேட்ஸ்மேன் வெற்றிக்கு நங்கூரமாக விளையாடுவது முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களில் ஒருவர் அவுட்டானதும் களமிறங்க வேண்டிய அவர் புதிய பந்துகளை எதிர்கொள்ள நேரிடும். அப்போது அவர் நிறைய பந்துகளை எதிர்கொண்டு நங்கூரமாக விளையாடி பெரிய ரன்கள் குவிப்பதற்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும்.
தடுமாறும் சுதர்சன்:
அத்துடன் அதிக பந்துகளை எதிர்கொண்டு அதனுடைய பளபளப்பை போக்குவது மிடில் ஆடரில் விளையாடும் பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன்கள் குவிக்க உதவும். அந்த வேலையை 2000 – 2009 தசாபத்தில் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டும், கடந்த தசாப்தத்தில் புஜாராவும் சிறப்பாக செய்தனர். தற்போது அவர்கள் விளையாடிய இடத்தில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் கருண் நாயரைக் கூட கழற்றி விட்ட இந்திய அணி சுதர்சனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது. அந்த வாய்ப்பில் இதுவரை 10 இன்னிங்ஸில் விளையாடியுள்ள சுதர்சன் வெறும் 288 ரன்களை 28.8 என்ற சுமாரான சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார். இங்கே அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதும் உண்மை.
செட்டாக மாட்டார் போல:
ஆனால் போட்டி மிகுந்த இந்திய அணியில் கிடைக்கும் வாய்ப்புகளில் அசத்தினால் மட்டுமே இடத்தை தக்க வைக்க முடியும் என்பதை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதை விட ராகுல் டிராவிட் 3வது இடத்தில் தம்முடைய முதல் 10 டெஸ்ட் இன்னிங்ஸில் 1500 பந்துகளை எதிர்கொண்டு 4 அரை சதங்கள் 1 சதம் உட்பட 530 ரன்களை 58.88 என்ற நல்ல சராசரியில் குவித்துள்ளார். ஒருமுறை கூட டக் அவுட்டானதில்லை.
இதையும் படிங்க: கவுதம் கம்பீர் தொடர்ச்சியாக செய்யும் தவறை விமர்சித்து சர்பராஸ் கானுக்கு ஆதரவு – தெரிவிக்கும் ரசிகர்கள்
பொறுமையின் சிகரமான புஜாரா 3வது இடத்தில் தம்முடைய முதல் 10 டெஸ்ட் இன்னிங்ஸில் 1402 பந்துகளை எதிர்கொண்டு 1 அரை சதம் 3 சதங்கள் உட்பட 685 ரன்களை 76.11 என்ற அபாரமான சராசரியில் குவித்துள்ளார். ஒருமுறை கூட டக் அவுட்டானதில்லை. ஆனால் சுதர்சன் தனது முதல் 10 இன்னிங்ஸில் வெறும் 641 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 2 அரை சதங்கள் உட்பட 288 ரன்களை 28.80 என்ற சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார். அதற்குள் 2 முறை டக் அவுட்டாகியுள்ளார். இந்த ஆதாரப் புள்ளிவிவரத்தைப் பார்க்கையில் 3வது இடத்தில் டிராவிட், புஜாராவின் இடத்தை சுதர்சன் நிரப்புவதற்கு பொருத்தமற்றவராகவே தெரிவது குறிப்பிடத்தக்கது.



