ரஞ்சி கோப்பை: 379 ரன்ஸ்.. சுந்தர் அசத்தல்.. ஆஸிக்கு நானும் வரலாமா? டெல்லியை பந்தாடிய சுதர்சன் இரட்டை சதம்

Sai Sudharsan
- Advertisement -

ரஞ்சிக் கோப்பை உள்ளூர் கிரிக்கெட் தொடரின் 2024 – 25 சீசன் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் தமிழக அணி முதல் போட்டியில் சௌராஷ்ட்ராவுக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு தங்களுடைய இரண்டாவது போட்டியில் டெல்லியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.

அப்போட்டி அக்டோபர் 18ஆம் தேதி தலைநகர் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு சாய் சுதர்சன் – நாராயன் ஜெகதீசன் ஆகியோர் ஆரம்பத்திலேயே டெல்லி பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டனர்.

- Advertisement -

சுதர்சன் அபாரம்:

அப்படியே ஆடுகளமும் கொஞ்சம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்ததை பயன்படுத்தி அந்த ஜோடியில் இருவருமே அரை சதமடித்தனர். தொடர்ந்து 168 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் ஜெகதீசன் 65 (101) ரன்கள் குவித்து நவ்தீப் சைனி வேகத்தில் போல்டானார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய சாய் சுதர்சன் சதமடித்து அசத்தினார்.

அதைத் தொடர்ந்து வந்த வாஷிங்டன் சுந்தர் தம்முடைய பங்கிற்கு நங்கூரமாக விளையாடி ரன்களை குவித்தார். அந்த வகையில் நேரம் செல்ல செல்ல டெல்லிக்கு பெரிய சவாலாக மாறிய இந்த ஜோடியில் சுதர்சன் 150 ரன்களும் சுந்தர் 50 ரன்களும் கடந்தனர். அதனால் 300 ரன்கள் தாண்டிய தமிழ்நாடு அணிக்கு தொடர்ந்து அட்டகாசமாக விளையாடிய சுதர்சன் இரட்டை சதமடித்தார்.

- Advertisement -

ஆஸ்திரேலிய வாய்ப்பு:

இறுதியில் கடைசி வரை முதல் நாளில் அவுட்டாகாத அந்த ஜோடியில் டெல்லியை அதன் சொந்த மண்ணில் பந்தாடிய சாய் சுதர்சன் 20 பவுண்டரி 1 சிக்ஸருடன் 202* ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருடன் சேர்ந்து விளையாடும் வாஷிங்டன் சுந்தர் சதத்தை நெருங்கி 96* ரன்களுடன் உள்ளார். அவர்களது அபார ஆட்டத்தால் முதல் நாள் முடிவில் தமிழ்நாடு 379-1 ரன்கள் எடுத்து இப்போட்டியில் வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது.

முன்னதாக டிஎன்பிஎல் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்திய சாய் சுதர்சன் கடந்த டிசம்பர் மாதம் தென்னாபிரிக்காவில் இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் அரை சதமடித்து அசத்திய அவர் 2024 ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிராக சதமடித்தார்.

இதையும் படிங்க: 125 ரன்ஸ்.. நியூஸிலாந்தை திருப்பி அடிக்கும் சர்பராஸ் கான்.. கிங் கோலி 4வது வீரராக அபார சாதனை.. இந்தியா தப்புமா?

அப்படியே 2024 துலீப் கோப்பையிலும் சதமடித்த அவர் தற்போது இரட்டை சதமடித்துள்ளார். அதனால் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் என்னை பேக்-அப் வீரராகவாது தேர்வு செய்யுங்கள் என்ற வகையில் சாய் சுதர்சன் பிசிசிஐக்கு காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement