இங்கிலாந்தில் சாய் சுதர்சனுக்கு விளையாட கிடைத்த வாய்ப்பு – பாராட்டிய ஹர்ஷா போக்லே, எந்த தொடர்னு தெரியுமா?

Sai Sudharsan Harsha Bhogle
- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் கடந்த சில வருடங்களாகவே டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்ததால் கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் விளையாடத் தேர்வானார். அதில் கிடைத்த வாய்ப்புகளில் அசத்திய அவர் இந்த வருடம் வெறும் 8 போட்டிகளில் 362 ரன்களை 141.41 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார். குறிப்பாக தோனி தலைமையிலான சென்னைக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் 96 ரன்கள் விளாசி ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பாராட்டுகளை அள்ளிய அவர் அதே வேகத்தில் 2023 டிஎன்பிஎல் தொடரில் கோப்பையை வென்ற கோவை கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து வெற்றியில் பங்காற்றினார்.

அப்படி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதால் இலங்கையில் நடைபெற்ற 2023 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பையில் களமிறங்கிய இந்தியா ஏ அணிக்காக விளையாட முதல் முறையாக தேர்வான அவர் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதைத்தொடர்ந்து பாண்டிச்சேரியில் நடைபெற்ற தியோதார் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற தெற்கு மண்டல அணியின் வெற்றியிலும் சிறப்பாக விளையாடி முக்கிய பங்காற்றிய அவர் தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்தில் வாய்ப்பு:
இந்நிலையில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது. குறிப்பாக சர்ரே அணிக்காக விளையாடும் ஷாம் கரண் போன்ற சில நட்சத்திர வீரர்கள் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கு தேர்வாகியுள்ளனர். அதன் காரணமாக சர்ரே அணிக்காக நடைபெற்று வரும் கவுண்ட்டி தொடரின் எஞ்சிய 3 போட்டிகளில் விளையாடுவதற்கு சாய் சுதர்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவெனில் பொதுவாக சர்வதேச அளவில் விளையாடிய நட்சத்திர வீரர்கள் தான் கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்கள். அந்த நிலைமையில் உள்ளூர் அளவில் வெறும் 8 தர போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தும் நல்ல ஃபார்மில் இருப்பதன் காரணமாக சாய் சுதர்சனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இது பற்றி சர்ரே பயிற்சியாளர் அலெக்ஸ் ஸ்டீவார்ட் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சர்வதேச மற்றும் உள்ளூர் அளவில் இருக்கும் நெருக்கமான அட்டவணைகளுக்கு மத்தியில் சாய் சுதர்சனை எங்களுடைய அணியில் வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக நான் மரியாதை வைத்துள்ள சில முக்கிய நபர்கள் அவரை எனக்கு பரிந்துரை செய்தனர். அதே போல அவருடைய அருகிலிருந்து பணியாற்றிய சில மகத்தான இந்தியர்களும் எனக்கு பரிந்துரை செய்தனர். எனவே இத்தொடரின் கடைசி 3 போட்டிகளில் சாய் எங்களுடைய பேட்டிங் வரிசையில் இணைய உள்ளார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: அட்லீஸ்ட் வெளிநாட்டு டெஸ்டில் விளையாட அவர பேசி சம்மதிக்க வெய்ங்க – டிராவிட், ரோஹித்துக்கு கங்குலி ஓப்பன் கோரிக்கை

அதை தொடர்ந்து செப்டம்பர் 3, 19, 26 தேதிகளில் நடைபெறும் போட்டிகளில் சர்ரே அணிக்காக களமிறங்கும் சாய் சுதர்சனை பிரபல தொகுப்பாளர் ஹர்ஷா போக்லே ட்விட்டரில் வாழ்த்தியுள்ளது பின்வருமாறு. “இந்திய கிரிக்கெட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுக்கு மத்தியில் என் கண்ணில் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. கவுண்ட்டி சாம்பியன்ஷிப் தொடரில் சர்ரே அணிக்காக சாய் சுதர்சன் 3 போட்டிகளில் விளையாட உள்ளார். அது அவருக்கு சரியானது” என்று பாராட்டியுள்ளார்.

Advertisement