
இங்கிலாந்து மற்றும் இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி ஜூலை 23ஆம் தேதி மான்செஸ்டர் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா முதல் நாளில் 264/4 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தைப் பெறுவதற்கு முயற்சித்து வருகிறது.
இந்திய அணிக்கு 94 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேஎல் ராகுல் 46 ரன்னில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதத்தை அடித்து 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கில் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் 3வது இடத்தில் களமிறங்கி பொறுப்புடன் விளையாடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 61 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார்.
அவருடன் சேர்ந்து விளையாடிய ரிஷப் பண்ட் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பாதத்தில் காயமடைந்து 37* ரன்னில் வெளியேறினார். அப்போது நிறைவுக்கு வந்த முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் களத்தில் ஜடேஜா 19*, தாகூர் 19* ரன்களுடன் இருக்கிறார்கள். இப்போட்டியில் இந்தியா பெரிய ரன்கள் குவிப்பதற்கு ரிஷப் பண்ட் விளையாடுவது அவசியமாகிறது.
ஆனால் பாதத்தில் பலத்த காயத்தை சந்தித்ததால் நடக்க முடியாமல் தடுமாறிய அவர் வண்டியில் ஏறி மிகுந்த வலியுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்நிலையில் ரிஷப் பண்ட் காயத்தை சோதிக்க மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார். எனவே அவர் விளையாடுவாரா என்பது இரண்டாவது நாளில் தெரிய வரும் என்றும் சுதர்சன கூறியுள்ளார்.
ஒருவேளை பண்ட் விலக வேண்டிய சூழ்நிலை வந்தால் மற்ற வீரர்கள் நிலைமையை சமாளித்து இந்தியாவை வெற்றி பெற வைப்போம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சுதர்சன் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக ரிஷப் நிறைய வலியைச் சந்தித்தார். தற்போது மருத்துவ சோதனைக்கு சென்றுள்ளதால் விவரங்கள் இரவு அல்லது நாளை தெரிய வரும்”
இதையும் படிங்க: 206 ரன்ஸ்.. 13 போர்ஸ் 8 சிக்ஸ்.. டெஸ்டில் டி20 போல ஆடிய ஆயுஷ் வரலாற்று சாதனை.. இங்கிலாந்தை பயமுறுத்திய இந்தியா
“இன்றும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த அவர் மேற்கொண்டு விளையாடாதது எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். அவர் இல்லாததால் ஒரு பேட்ஸ்மேனை நாங்கள் இழந்துள்ளோம். ஒருவேளை அவர் நாளை வராவிட்டால் எங்களுக்கு அதனுடைய விளைவு உண்டாகும். அதே சமயம் எங்களுக்கு களத்தில் நல்ல பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இன்னும் சில ஆல் ரவுண்டர்களும் இருக்கிறார்கள். எனவே பண்ட் இழப்பை சரி செய்து வெற்றிக்காக எங்களுடைய சிறந்த முயற்சிகளைக் கொடுப்போம்” என்று கூறினார்.