206 ரன்ஸ்.. 13 போர்ஸ் 8 சிக்ஸ்.. டெஸ்டில் டி20 போல ஆடிய ஆயுஷ் வரலாற்று சாதனை.. இங்கிலாந்தை பயமுறுத்திய இந்தியா

Ayush Mhatre 106
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அண்டர்-19 கிரிக்கெட் அணி அங்கே முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 2 (5) என்ற கணக்கில் வென்றது. அடுத்து நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது. 2வது போட்டி செம்ஸ்போர்ட் மைதானத்தில் ஜூலை 20ஆம் தேதி துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அண்டர்-19 அணி முதல் இன்னிங்ஸில் 309 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஏக்னாஸ் சிங் 117, கேப்டன் தாமஸ் ரெவ் 59 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணிக்கு அதிகபட்சமாக நமன் புஷ்பக் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய இந்திய அண்டர் 19 அணியை சிறப்பாக பவுலிங் செய்த இங்கிலாந்து 279 ரன்களுக்கு சுருட்டியது.

- Advertisement -

ஆயுஷ் மிரட்டல்:

அதிகபட்சமாக விஹான் மல்கோத்ரா சதமடித்து 128, கேப்டன் ஆயுஷ் மாத்ரே 80 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ரால்பி ஆல்பர்ட் 6 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக 30 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இங்கிலாந்து தங்களுடைய 2வது இன்னிங்சில் 324 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

அதிகபட்சமாக ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் டாக்கின்ஸ் 136, ஆடம் தாமஸ் 91 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஆதித்யா ராபர்ட் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 355 ரன்களை துரத்திய இந்தியாவை தோற்கடித்து இங்கிலாந்து வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போல் அதிரடியாக விளையாடக்கூடிய வைபவ் சூரியவன்சி கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

- Advertisement -

பயத்தைக் காட்டிய இந்தியா:

அடுத்து வந்த விகான் மல்கோத்ரா தடுமாறி 27 ரன்னில் விக்கெட்டை இழந்தார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் மற்றும் கேப்டன் ஆயுஸ் மாத்ரே அதிரடியாக விளையாடினார். குறிப்பாக டெஸ்ட் போட்டியில் டி20 போல விளையாடி இங்கிலாந்து பவுலர்களை புரட்டி எடுத்த அவர் வேகமாக ரன்களை குவித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர் 64 பந்தில் சதத்தை அடித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்.

அப்போது 13 பவுண்டரி 6 சிக்ஸருடன் 126 (80) ரன்களை 157.50 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசிய மாத்ரே அவுட்டானார். இதன் வாயிலாக ஒரு அண்டர் 19 டெஸ்ட் போட்டியில் 200+ ரன்கள் (மொத்தம் 206) அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2006இல் இதே இங்கிலாந்துக்கு எதிராகத் தன்மை ஸ்ரீவஸ்தவா 199 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அவருடன் சேர்ந்து அதிரடி காட்டிய அபிஜான் குண்டு 65 (46) ரன்களில் அவுட்டானார்.
இதையும் படிங்க: ரோஹித், கும்ப்ளே, டிராவிட் இல்ல.. இந்திய கிரிக்கெட்டின் டாப் 5 மகத்தான வீரர்களை தேர்ந்தெடுத்த ரவி சாஸ்திரி

மிடில் ஆர்டரில் ராகுல் குமார் 5, அம்ரிஷ் 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.
இருப்பினும் ஹர்வன்ஸ் 29*, கனிஷ்க் சௌஹான் 12* ரன்களை எடுத்ததால் இந்தியாவின் வெற்றிக்கு 65 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது மோசமான வெளிச்சம் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டதால் போட்டி டிராவில் முடிந்தது. ஆனால் டி20 போல அதிரடியாக விளையாடிய இந்திய அணி இங்கிலாந்துக்கு சொந்த மண்ணில் பயத்தைக் காட்டியது என்றே சொல்லலாம்.

Advertisement