தமிழகத்தைச் சேர்ந்த இளம் நட்சத்திர வீரரான சாய் சுதர்சன் உள்ளூர் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தியது மட்டுமின்றி இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்களை குவித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி இருந்தார். இதன் காரணமாக அவரது திறமை மீது நம்பிக்கை வைத்த இந்திய அணியின் நிர்வாகம் டெஸ்ட் போட்டிகளுக்கான வாய்ப்பை வழங்கியது.
இரண்டாவது போட்டியில் சாய் சுதர்சன் விளையாடுவது சந்தேகம் :
அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த அவர் கடந்த ஜூன் 20-ஆம் தேதி ஹெட்டிங்லி நகரில் துவங்கிய முதல் போட்டியில் இந்திய அணி சார்பாக அறிமுகமானார். அவரது அறிமுக தொப்பியை அனுபவ வீரரான சத்தீஸ்வர் புஜாரா வழங்கி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் அறிமுகமான முதல் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை சாய் சுதர்சன் வெளிப்படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகிய சாய் சுதர்சன் இரண்டாவது இன்னிங்ஸில் 30 ரன்கள் மட்டுமே குவித்து ஏமாற்றம் அளித்திருந்தார்.
ஆனாலும் இளம் வீரரான இவர் மீது நம்பிக்கை வைத்து இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பினை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தற்போது அவர் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் சாய் சுதர்சன் பீல்டிங் செய்கையில் தோள்பட்டை பகுதியில் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது அந்த காயத்திற்கான சிகிச்சையை சாய் சுதர்சன் மேற்கொண்டு வருகிறார். அதனால் அடுத்த போட்டிக்குள் அவர் முழு உடற்தகுதியை பெற்றால் மட்டுமே இரண்டாவது போட்டியில் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : 180க்கு ஆல் அவுட்.. வெ.இ மண்ணில் ஆஸ்திரேலியா பரிதாப சாதனை.. பதிலடி கொடுக்கும் ஆஸி
அப்படி ஒருவேளை அவர் முழு உடற்தகுதியை எட்டவில்லை என்றால் அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் அறிமுகமாக அதிகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஒரு ஜூலை 2-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் நகரில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.



