ஆரம்பமே பரிதாபம்.. அறிமுகப் போட்டியுடன் நாடு திரும்பிய தமிழக வீரர் சாய் சுதர்சன்.. காரணம் என்ன?

Sai Sudharsan
- Advertisement -

ஜிம்பாப்வேவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற ஜிம்பாப்வே உலக சாம்பியனான இந்தியாவை தோற்கடித்து அசத்தியது. ஆனால் அதற்கு பதிலடியாக 2வது போட்டியில் ஜிம்பாப்பே அணியை அடித்து நொறுக்கிய இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை சமன் செய்து தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது.

ஜூலை 7ஆம் தேதி ஹராரே நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 235 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 100, ருதுராஜ் 77*, ரிங்கு சிங் 48* ரன்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த ஜிம்பாபே சுமாராக விளையாடி 134 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

நாடு திரும்பும் சுதர்சன்:
அதிகபட்சமாக வேஸ்லி 43 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஆவேஷ் கான், முகேஷ் குமார் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். முன்னதாக அந்தப் போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்தியாவுக்காக அறிமுகமானார். குறிப்பாக இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஜெய்ஸ்வால், சிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோர் 2024 டி20 உலகக் கோப்பையை முடித்து விட்டு ஜிம்பாப்வே பயணிக்க தாமதமானது.

அதனால் சாய் சுதர்சன், ஹர்ஷித் ராணா மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகிய 3 வீரர்கள் முதல் 2 போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டனர். அதில் முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறாத சாய் சுதர்சனுக்கு 2வது போட்டியில் வாய்ப்பு கிடைத்தது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. ஆனால் அந்தப் போட்டியில் ருதுராஜ், அபிஷேக், ரிங்கு ஆகியோரே அடித்து நொறுக்கியதால் அவருக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையை முடித்துக் கொண்டு ஜெய்ஸ்வால், சிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோர் ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இணைந்துள்ளனர். அதன் காரணமாக சாய் சுதர்சன் இந்திய அணியிலிருந்து விலகி நாடு திரும்ப வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஏனெனில் கடைசி 3 போட்டிகளுக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

இதையும் படிங்க: ஆரம்பம் மட்டுமே.. எல்லாத்துக்கும் காரணம் அவர் தான்.. வீடியோ காலில் வாழ்த்திய யுவராஜ் பற்றி அபிஷேக்

அந்த வகையில் அறிமுக போட்டியுடன் அவர் நாடு திரும்பியுள்ளது தமிழக ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. குறிப்பாக அந்த போட்டியில் அறிமுகத் தொப்பி பெற்றதை தவிர்த்து பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெறாத சுதர்சன் பரிதாபமாக நாடு திரும்புகிறார். இதைத் தொடர்ந்து நாடு திரும்பியதும் அவர் 2024 டிஎன்பிஎல் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement