ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. ஜூலை 7ஆம் தேதி ஹராரே நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 235 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக இளம் வீரர்கள் அபிஷேக் ஷர்மா 100, ரிங்கு சிங் 48*, ருதுராஜ் 77* ரன்கள் எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து சேசிங் செய்த ஜிம்பாப்வே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 134 ரன்கள் சுருண்டு தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக வேஸ்லி 43 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதனால் முதல் போட்டியில் தோல்வியை கொடுத்த ஜிம்பாப்வேவுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்து தொடரை சமன் செய்தது.
குரு யுவராஜ் சிங்:
இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். கடந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் அடித்து நொறுக்கி அனைவரது கவனத்தை ஈர்த்த அவர் இந்தியாவுக்காக இத்தொடரின் முதல் போட்டியில் அறிமுகமானார். ஆனால் அந்த போட்டியில் டக் அவுட்டான அவர் அதற்கும் சேர்த்து இப்போட்டியில் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.
அந்த நிலையில் இப்போட்டி முடிந்ததும் தம்முடைய குடும்பம் மற்றும் குருவாக கருதும் யுவராஜ் சிங் ஆகியோருக்கு அபிஷேக் ஷர்மா வீடியோ அழைப்பு செய்தார். அப்போது யுவராஜ் சிங் வாழ்த்தி பேசியது பின்வருமாறு. “வெல்டன். பெருமைப்படுகிறேன். நீங்கள் இதற்கு தகுதியானவர்கள். இன்னும் நிறைய வரும். இது வெறும் ஆரம்பம் மட்டுமே” என்று கூறினார்.
அதனால் மகிழ்ச்சியடைந்த அபிஷேக் சர்மா தொடர்ந்து யுவராஜ் சிங் உதவியது பற்றி பேசியது பின்வருமாறு. “முதல் போட்டி முடிந்ததும் நான் யுவி பாஜிக்கு போன் செய்தேன். ஏன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்த அவர் இது நல்ல துவக்கம் என்று சொன்னார். இன்று என்னுடைய குடும்பத்தை போலவே அவரும் கண்டிப்பாக பெருமையுடன் இருப்பார் என்று நான் நினைக்கிறேன்”
இதையும் படிங்க: அவங்க 2 பேர் ஆடுன அட்டகாசமான இன்னிங்ஸ் தான் வெற்றிக்கு காரணம் – கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டி
“அவரால் தான் இவை அனைத்தும் நடந்தது. ஏனெனில் அவர் என்னுடைய ஆட்டத்தை முன்னேற்றுவதற்கு கடினமாக உழைத்துள்ளார். என்னுடைய கிரிக்கெட் மட்டுமல்லாமல் என்னை முன்னேற்றுவதற்கும் அவர் கடந்த 2 – 3 வருடங்களாக கடினமாக உழைத்துள்ளார். எனவே இது மிகப்பெரிய தருணம்” என்று கூறினார். இந்த நிலையில் இந்திய அணியில் ரோகித் சர்மாவின் இடத்தை நிரப்ப அபிஷேக் சர்மா கிடைத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டுவது குறிப்பிடத்தக்கது.



