
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத் நகரில் மார்ச் 29ஆம் தேதி நடைபெற்ற 9வது போட்டியில் மும்பை அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வீழ்த்தியது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் 197 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 63, கேப்டன் கில் 38, ஜோஸ் பட்லர் 39 ரன்கள் எடுத்தர்.
மும்பைக்கு அதிகபட்சமாக கேப்டன் பாண்டியா 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய மும்பை அணி குஜராத் பவுலர்களின் நல்ல பந்து வீச்சில் தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 160-6 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 48, திலக் வர்மா 39 எடுத்த நிலையில் குஜராத்துக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதனால் குஜராத் தங்களுடைய முதல் வெற்றியைப் பெற்ற நிலையில் மும்பை தங்களது இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது. முன்னதாக இந்தப் போட்டியில் 15வது ஓவரை தமிழக வீரர் சாய் கிஷோர் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் பௌண்டரி அடித்த பாண்டியா அடுத்தப் பந்தில் ரன்கள் எடுக்கவில்லை. தனது அருகிலேயே அடிக்கப்பட்ட அந்தப் பந்தை எடுத்த சாய் கிஷோர் பாண்டியாவை முறைக்கும் வகையில் பார்த்தார்.
அதற்கு பதிலுக்கு முறைத்த பாண்டியா பிரபல ஆங்கில கெட்ட வார்த்தை பயன்படுத்தி போய் பவுலிங் செய் என்று சொன்னார். அப்போது எதுவும் பேசாத கிஷோர் தொடர்ந்து முறைத்து பார்த்துக் கொண்டே அவரிடம் சென்றார். உடனே நடுவர்கள் உள்ளே புகுந்து வாக்குவாதத்தை நிறுத்தினர். இருப்பினும் போட்டியின் முடிவில் இருவரும் சிரித்த முகத்துடன் கை கொடுத்துக் கொண்டனர்.
இந்நிலையில் பாண்டியா தமக்கு நண்பர் என்று தெரிவிக்கும் சாய் கிசோர் போட்டி சூழ்நிலையில் அப்படி நடந்ததாக தெளிவுப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இல்லை. ஹர்திக் பாண்டியா என்னுடைய நல்ல நண்பர். இருப்பினும் களத்திற்குள் நீங்கள் அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். களத்திற்குள் யார் வேண்டுமானாலும் எதிரியாக இருப்பார்கள். ஆனால் நீங்கள் அதைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளக்கூடாது”
இதையும் படிங்க: அவங்க பார்ட்டிக்கு வரலைன்னா ஜெய்க்க முடியாது.. மும்பை தோல்விக்கு காரணம் இது தான்.. கேப்டன் பாண்டியா வருத்தம்
“நாங்கள் நல்ல போட்டியாளர்கள். போட்டி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பிட்ச்சில் எனக்கு பெரிய ஆதரவு கிடைக்காததால் எனது அணிக்காக தடுப்பாட்ட பவுலிங் செய்தேன். சூரியகுமார் எனது நல்ல லென்த் பந்துகளை சிறப்பாக எதிர்கொண்டார். அப்படி யாராவது நன்றாக விளையாடினால் நீங்கள் பாராட்டு கொடுக்க வேண்டும். எனது உள்ளுணர்வுகளை பின்பற்றி பவுலிங் செய்கிறேன். சூர்யாவை இந்திய அணியின் வலைப்பயிற்சியில் பார்த்துள்ளதால் அவருக்கு எதிராக எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்று சொன்ன சுப்மனுக்கும் பாராட்டு கொடுக்க வேண்டும். இந்த வருடம் நிறைய உழைத்துள்ளதால் 2025 ஐபிஎல் எனக்கு சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.