கங்குலி ஓகே சொல்றாரு. ஆனா டிராவிட் என்னை புறக்கணிச்சிட்டாரு – புலம்பும் சீனியர் வீரர்

Ganguly
- Advertisement -

பிப்ரவரி 24ஆம் தேதி முதல் துவங்கும் இலங்கை சுற்றுப் பயணத்துக்கான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 24ஆம் தேதியன்று துவங்கும் இந்த சுற்றுப்பயணத்தின் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது லக்னோ மற்றும் தர்மசாலா ஆகிய மைதானங்களில் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து நடைபெற உள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது மொஹாலி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்தியாவின் புதிய கேப்டனாக அனுபவ வீரர் ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.

IND

- Advertisement -

கழற்றிவிடப்பட்ட சீனியர்கள்:
ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த டெஸ்ட் அணியில் பார்மின்றி தவித்து வரும் அஜின்கியா ரகானே மற்றும் புஜாரா ஆகிய மூத்த வீரர்கள் நீண்ட நாட்களுக்கு பின் முதல் முறையாக நீக்கப்பட்டுள்ளார் கள். இவர்களுடன் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா மற்றும் அனுபவ விக்கெட் கீப்பர் ரிதிமான் சஹா ஆகியோரும் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் இந்த இலங்கை தொடரிலிருந்து நீக்கப்படுவார்கள் என கடந்த மாதம் செய்திகள் வெளியாகியது போலவே தற்போது நடந்துள்ளது.

கடந்த சில வருடங்களாகவே இளம் வீரர் ரிஷப் பண்ட் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து இந்திய டெஸ்ட் அணியில் ஒரு நிரந்தரமான இடத்தைப் பிடித்து விட்டார். அதன் காரணமாக இந்திய அணியில் மூத்த விக்கெட் கீப்பராக இருந்த ரித்திமான் சஹாவுக்கு பெரும்பாலும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது. இருப்பினும் அவர் காயமடையும் நேரங்களில் கிடைத்த வாய்ப்புகளிலும் கூட சஹா பெரிய அளவில் ரன்களை குவிக்க தடுமாறி வந்தார். எனவே இந்தியாவின் எதிர்காலத்தை கருதியும் அவரின் வயதை கருத்தில் கொண்டு அவருக்கு பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வண்ணம் அவரை இந்திய அணியில் இருந்து தேர்வுக்குழுவினர் கழற்றி விட்டுள்ளார்கள்.

Saha

கங்குலி ஆதரவு – டிராவிட் புறக்கணிப்பு:
இந்நிலையில் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டது பற்றி விருத்திமான் சஹா இன்று மனம் திறந்து பேசியது பின்வருமாறு. “கான்பூர் டெஸ்ட் போட்டிக்கு பின்பு ராகுல் டிராவிட் என்னை அழைத்திருந்தார். அந்த சமயத்தில் என்னை எதற்காக விளையாடும் 11 அணியில் சேர்க்கவில்லை மற்றும் எனது எதிர்காலம் பற்றி அவர் பேசுவார் என நினைத்தேன். அத்துடன் அந்த தருணத்தில் சௌரவ் கங்குலி எனக்கு மெசேஜ் செய்து என்னைப் பாராட்டி எனக்கு தன்னம்பிக்கையை அளித்தார். எனவே ராகுல் டிராவிட் என்னை கூப்பிட்ட போது அவருடைய திட்டங்களைப் பற்றி என்னிடம் பேசுவார் என நினைத்தேன்.

- Advertisement -

ஆனால் ராகுல் டிராவிட் என்னிடம் “இதை எப்படி கூறுவது என்று தெரியவில்லை. இருப்பினும் ஒரு சில தேர்வுக்குழுவினர் நீண்ட காலமாக ஒரு புதிய விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய விரும்புகிறார்கள்” என கூறினார். அதற்கு “வயது அல்லது மோசமான செயல்பாடு காரணமாக என்னை நீக்க நினைக்கிறார்களா” என நான் பதில் அளித்தேன். அதற்கு பதிலளித்த ராகுல் டிராவிட் இந்திய தேர்வு குழுவினர் புதிய இளம் விக்கெட் கீப்பர்களை உருவாக்க நினைப்பதாக கூறினார்” என தெரிவித்துள்ள சஹா மோசமான தருணத்தில் சௌரவ் கங்குலி ஆதரவு தெரிவித்ததாக கூறியுள்ளார்.

saha 1

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “ஒரு கட்டத்தில் ஓய்வு பற்றி முடிவெடுக்க விரும்பினால் அதை இப்போதே செய்யுமாறு ராகுல் டிராவிட் என்னிடம் கூறினார். ஆனால் ஐபில் உட்பட பல கிரிக்கெட் போட்டிகளில் நான் விளையாட விரும்புவதால் ஓய்வு பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை. எப்போதுமே நான் எனது விளையாட்டை விரும்பி விளையாடுகிறேன். அதை விரும்பும் வரை நான் விளையாடிக் கொண்டிருப்பேன்” என கூறியுள்ள சஹா தேர்வுக் குழுவினர் விரும்பாத காரணத்தால் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த போதே கௌரவத்துடன் ஓய்வு பெற்று விடுமாறு ராகுல் டிராவிட் கேட்டுக்கொண்டதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சஹாவுக்கு வாய்ப்பு முடிந்தது:
இதே விஷயத்தைப் பற்றி இந்தியாவின் தேர்வு குழுவினர் என்ன கூறினார் என்பதை பற்றியும் ரித்திமான் சாஹா தெரிவித்துள்ளார். இது பற்றி சேட்டன் சர்மா என்ன கூறினார் என்பது பற்றி சகா தெரிவித்தது பின்வருமாறு. “இலங்கை டெஸ்ட் தொடருக்கு உன்னை தேர்வு செய்ய மாட்டோம் என சேட்டன் சர்மா கூறினார். அதற்கு இலங்கை தொடருக்கு மட்டும் என்னை தேர்வு செய்ய மாட்டீர்களா அல்லது அதையும் தாண்டியா” என நான் பதிலளித்தேன்.

saha

அதற்கு ஒரு நிமிடம் பொறுமையாக இருந்த பின் “இனி எப்போதுமே இந்திய அணிக்கு உன்னை தேர்வு செய்ய மாட்டோம்” என சேட்டன் சர்மா கூறினார். அவரிடமும் இதற்கு காரணம் “எனது வயதா அல்லது மோசமான செயல்பாடா” என கேள்வியை எழுப்பினேன். அதற்கு அவர் “இது எதுவுமே காரணமில்லை, இளம் வீரரை உருவாக்க நினைக்கிறோம்” என பதிலளித்து ரஞ்சி கோப்பையில் விளையாடும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்” என கூறியுள்ளார்.

- Advertisement -

மொத்தத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் இனி ரித்திமான் சஹாவுக்கு இடம் கிடையாது என்பது இதன் வாயிலாக அதிகாரபூர்வமாக தெரியவருகிறது. ஒருவேளை ரிஷப் பண்ட் காயம் அடைந்தால் கூட மற்றொரு இளம் கேஎஸ் பரத்துக்கு வாய்ப்பளிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துவிட்டது. அவர் மட்டுமல்லாது சீனியர் வீரர்களை புறக்கணித்துள்ளது பற்றி தேர்வு குழு தலைவர் சேட்டன் சர்மா கூறியது பின்வருமாறு.

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியாவிற்கு எப்போது இந்திய அணியில் இடம்? வெளிப்படையாக உண்மையை சொன்ன – சேத்தன் சர்மா

“நாங்கள் யாருக்கான கதவையும் மூடவில்லை. இங்கு யாராக இருந்தாலும் பேட்டிங்கில் ரன்கள் குவித்து பந்துவீச்சில் விக்கெட்டுகள் எடுத்தால் நாட்டுக்காக விளையாடலாம். மேலும் அணியில் நீக்கப்பட்டுள்ள 4 மூத்த வீரர்களையும் ரஞ்சி கோப்பையில் விளையாடும்படி கேட்டுக் கொண்டுள்ளேன். நீண்ட நாட்களுக்கு பின் நடக்கும் இந்த தொடரில் அவர்கள் விளையாடினால் சிறப்பானதாக இருக்கும்” என கூறியுள்ளார். இருப்பினும் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட இனி சீனியர் வீரர்கள் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு மிக மிக குறைவு என தெரியவருகிறது.

Advertisement