ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்தது. அத்தொடருக்கு முன்பு வரை ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சுமாரான ஃபார்மில் இருந்தார்கள். ஆனால் சாம்பியன்ஸ் கோப்பையில் முக்கியமான நேரத்தில் அசத்திய அவர்கள் இந்தியாவின் வெற்றிக்குக் கருப்பு குதிரையாக செயல்பட்டு தங்களை சாம்பியன் பிளேயர்கள் என்பதை நிரூபித்தனர்.
மறுபுறம் தொடரை நடத்திய பாகிஸ்தான் ஒரு வெற்றியைக் கூட பெறாமல் லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் பாபர் அசாமும் சமீப வருடங்களாகவே சுமாரான ஃபார்மில் இருந்து வருகிறார். ஆனால் முக்கியமான சாம்பியன்ஸ் கோப்பையிலும் சுமாராகவே விளையாடிய காரணத்தால் அடுத்து நடைபெறும் நியூஸிலாந்து டி20 தொடரில் பாபர் அசாம் அதிரடியாக கழற்றி விடப்பட்டுள்ளார்.
விராட் கோலி மாதிரி சப்போர்ட்:
இந்நிலையில் விராட் கோலி சுமாராக செயல்பட்ட காலங்களில் இந்தியா ஆதரவளித்ததாக பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல் தெரிவித்துள்ளார். ஆனால் பாகிஸ்தான் நிர்வாகம் பாபரை அணியில் இருந்து நீக்கியது சரியல்ல என்றும் அவர் சாடியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலிக்கு இந்தியா எப்படி ஆதரவு கொடுத்தார்கள் என்பதைப் பாருங்கள்”
“நீண்ட காலமாக விராட் கோலி தடுமாறிய போதும் அவரை யாருமே அணியிலிருந்து கட்டாயமாக நீக்கவில்லை. பாபர் அசாம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மிகப்பெரிய நட்சத்திரம். அப்படி இருந்தும் சுமாராக விளையாடும் அவரை அணியிலிருந்து தள்ளுவதில் அனைவரும் குறியாக இருக்கின்றனர். உங்களிடம் ஒரே ஒரு நட்சத்திரம் மட்டுமே இருக்கிறார்”
சச்சினால் கூட முடியாது:
“அவரையும் நீங்கள் இப்படி தள்ளினால் எப்படி நம்முடைய கிரிக்கெட் தாக்குப் பிடிக்கும்? இது மிகப்பெரிய பிரச்சனை. நமது முன்னாள் வீரர்கள் விமர்சிக்காமல் தங்களுடைய வாயை மூடிக்கொள்ள வேண்டும். கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் மோசமான காலங்களை சந்திப்பது சகஜம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கை முழுவதும் உங்களால் ஒரே மாதிரியான கிரிக்கெட்டை விளையாட முடியாது”
இதையும் படிங்க: பயத்தில் கோலியிடம் அதை கூட சொல்லத் தெரியல.. அதான் 2021இல் வருண் சொதப்பிட்டாரு.. பரத் அருண் பேட்டி
“சச்சின் டெண்டுல்கரால் கூட அனைத்து போட்டிகளிலும் சதத்தை அடிக்க முடியாது. அவரும் டக் அவுட்டாவார். உலகத்தரம் வாய்ந்த வீரரான அவரும் இது போன்ற மோசமான காலங்களை சந்தித்துள்ளார். எனவே நீங்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்து தடுமாற்றமாக விளையாடும் வீரர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். பாபர் நம்பர் ஒன் வீரராக இருக்கும் போது ஆதரவு தேவையில்லை. ஆனால் தடுமாறும் போது ஆதரவு அவசியம்” என்று கூறினார்.