
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ரோஹித் சர்மா கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் புதிய கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மறுபுறம் சாதாரண வீரர்களாக மட்டும் தேர்வாகியுள்ள விராட் கோலி, ரோஹித் சர்மா 2027 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது.
அதை விட ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் சாதாரண வீரராக கூட தேர்ந்தெடுக்கப்படாமல் மொத்தமாக கழற்றி விடப்பட்டுள்ளது பல ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. ஏனெனில் தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் ஃபீல்டராக கருதப்படும் அவர் ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்ல தம்முடைய பங்காற்றினார். சமீபத்தில் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் ஜடேஜா இந்தியா தொடரை சமன் செய்யும் உதவினார்.
தற்போது நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் தொடரின் முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனாலும் அவருக்கு ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. அது பற்றி கேட்டதற்கு துபாயில் எக்ஸ்ட்ரா ஸ்பின்னர் தேவைப்பட்டதாலயே 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் ஜடேஜாவை தேர்ந்தெடுத்ததாக தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்தார்.
இருப்பினும் ஆஸ்திரேலியாவில் 2 இடது கை ஸ்பின்னர்கள் தேவையில்லை என்பதால் ஜடேஜா கழற்றி விடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் எக்ஸ்ட்ரா ஸ்பின்னர் தேவையில்லை என்று சொல்லி கழற்றி விடுவதற்கு ஜடேஜா ஒன்றும் எக்ஸ்ட்ரா லக்கேஜ் இல்லையென அகர்கரை முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் சாடியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“சாம்பியன்ஸ் டிராபியில் எக்ஸ்ட்ரா ஸ்பின்னர்கள் தேவைப்பட்ட காரணத்தாலேயே ரவீந்திர ஜடேஜா இந்திய அணியில் இருந்தார் என்று தேர்வாளர் சொல்கிறார். இப்படி சொல்வதற்கு ஜடேஜா எக்ஸ்ட்ரா லக்கேஜா? உண்மையில் அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் லெஜெண்ட். இந்திய அணியில் எக்ஸ்ட்ரா வீரர்கள் தேவைப்படும் போது மட்டுமே நீங்கள் ஜடேஜாவை தேர்ந்தெடுப்பீர்களா?”
இதையும் படிங்க: ஹீரோன்னு சொல்லி ஆட்டோ ஓட்ட சொல்லக்கூடிய இவ்வுலகில் சாதிக்க.. தோனி இதை செய்ய சொன்னாரு.. சிராஜ்
“இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்தியதால் நீங்கள் சுப்மன் கில்லை ஒருநாள் அணியின் கேப்டனாகவும் டி20 அணியின் துணை கேப்டனாகவும் தேர்ந்தெடுத்துள்ளதாக சொல்கிறீர்கள். ஆனால் ஜடேஜாவும் அதே இங்கிலாந்தில் அசத்தினார். முதல் வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்த அவர் சதத்தை அடித்தார். அதே வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சதத்தை அடித்த துருவ் ஜுரேலுக்கு நீங்கள் ஒருநாள் அணியில் வாய்ப்பளித்துள்ளீர்கள். ஆனால் ஜடேஜாவுக்கு மட்டும் நீங்கள் டாட்டா காட்டியுள்ளீர்கள்” என்று கூறினார்.