பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ் செய்து வென்றது. முன்னதாக இந்த தொடருடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக கடந்த மாதமே அறிவித்த நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் முதல் போட்டியிலேயே சதமடித்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
அந்த நிலையில் ஜனவரி 3ஆம் தேதி தன்னுடைய சொந்த ஊரான சிட்னி நகரில் துவங்கிய கடைசி போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் 34 ரன்கள் எடுத்த அவர் 2வது இன்னிங்ஸில் 57 ரன்கள் குவித்து கடைசி முறையாக ஆஸ்திரேலியாவின் வெற்றியில் பங்காற்றி விடை பெற்றார். கடந்த 2009இல் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி அதிரடியாக விளையாடும் வீரராக தன்னை அறிமுகப்படுத்திய அவர் 2011இல் டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகமானார்.
வாழ்த்திய சச்சின்:
அப்போதிருந்து 112 டெஸ்ட் போட்டிகளில் 8786 ரன்களை 44.6 என்ற நல்ல சராசரியில் குவித்துள்ள அவர் 26 சதங்கள் 37 அரை சதங்கள் 3 இரட்டை சதங்கள் விளாசி 335 ரன்களை அதிகபட்ச ஸ்கோராக பதிவு செய்துள்ளார். அதே போல 2024 புத்தாண்டு தினத்தன்று ஒருநாள் போட்டிகளிலும் ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர் 2015, 2023 உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய ஐசிசி கோப்பைகளை ஆஸ்திரேலியா வெல்ல உதவியதை மறக்க முடியாது.
அந்த வகையில் நவீன கிரிக்கெட்டின் நட்சத்திர வீரராக விடைபெற்ற அவருக்கு பட் கமின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியினரும் பாகிஸ்தான் அணியினரும் இருபுறமும் நின்று கைதட்டி வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பினர். அவர்களது வாழ்த்தை ஏற்ற வார்னர் தன்னுடைய சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் குடும்பம் மற்றும் மனைவியுடன் உருக்கமான பிரியாத மனதுடன் விடை பெற்றார்.
இந்நிலையில் ஆரம்ப காலங்களில் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடிய வார்னர் பொறுமையாக விளையாட வேண்டிய டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தும் அளவுக்கு முன்னேறியது அபாரமானது என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். அதை தன்னுடைய அனுபவத்தால் சாதித்துள்ள வார்னருக்கு அவர் ட்விட்டரில் வாழ்த்தியுள்ளது பின்வருமாறு. “அடித்து நொறுக்கக் கூடிய டி20 பேட்ஸ்மேனாக இருந்து ஒரு நெகிழ்ச்சியான டெஸ்ட் வீரராக மாறியது டேவிட் வார்னர் பயணத்தின் தகவமைப்பு மற்றும் உறுதி ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது”
இதையும் படிங்க: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த டேவிட் வார்னர் எடுக்கவுள்ள புதிய அவதாரம் – அவரே கூறிய தகவல்
“கிரிக்கெட்டில் அவருடைய பரிணாம வளர்ச்சி அபாரமானது. குறிப்பாக இன்னிங்ஸை வேகப்படுத்தும் கலையில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தன்மையை அவர் காண்பித்தார். அற்புதமான டெஸ்ட் கேரியருக்காக வாழ்த்துக்கள் டேவிட். உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் சிறந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்” என்று கைதட்டி பாராட்டியுள்ளார்.