உன் மூக்கு உடைஞ்சுடுச்சு – 16 வயதில் பாக் வீரர்களிடம் எதிர்கொண்ட ஸ்லெட்ஜிங் பற்றி மனம் திறந்த சச்சின்

Sachin Tendulkar Debut
- Advertisement -

மும்பையைச் சேர்ந்த நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா மட்டுமல்லாது ஒட்டுமொத்த உலகமே கண்ட மிகச்சிறந்த வீரர்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். குறிப்பாக 90களில் சச்சின் அடித்தால் தான் இந்தியா வெற்றி பெறும் என்ற நிலைமையால் அவர் அவுட்டானதும் இந்தியாவில் ஆஃப் செய்யப்பட்ட தொலைக்காட்சிகள் ஏராளம். ஆனால் பெரும்பாலான போட்டிகளில் ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை அட்டகாசமாக எதிர்கொண்டு இந்தியாவுக்கு நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் 24 வருடங்களாக இந்திய பேட்டிங்கை தனது தோள் மீது சுமந்தவர் என்றால் மிகையாகாது.

sachin 2

- Advertisement -

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் குதிரை கொம்பாக கருதப்பட்ட இரட்டை சதத்தை எப்படி அடிக்க வேண்டும் என்பதை இந்த உலகிற்கு கற்றுக் கொடுத்த அவர் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாகவும் இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாகவும் திகழ்கிறார். அவரது காலத்தில் இந்தியாவை சாய்க்க வேண்டுமெனில் முதலில் சச்சினை அவுட்டாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எதிரணி பவுலர்கள் அவரைக் குறி வைத்து தாக்கிய போட்டிகளையும் அதற்கு அவர் தக்க பதிலடி கொடுத்த தருணங்களையும் ரசிகர்களால் மறக்கவே முடியாது.

16 வயதினிலே:
அப்படி சர்வதேச கிரிக்கெட்டில் முடி சூடா மன்னனாக இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக கொண்டாடப்படும் அவர் 16 வயது பிஞ்சு கால்களுடன் கடந்த 1989ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதுவும் இம்ரான் கான், வாசிம் அக்கரம் போன்ற அதிரடியான வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமானார். இந்நிலையில் அந்த அறிமுக போட்டியிலேயே வாக்கர் யூனிஸ் வீசிய பவுன்சர் தமது மூக்கை உடைத்ததாகவும் அப்போது ஜாவேட் மியான்தத் மருத்துவமனைக்குச் செல்லுமாறு ஸ்லெட்ஜிங் செய்ததாகவும் மன திறக்கும் சச்சின் டெண்டுல்கர் அதற்கெல்லாம் அசராமல் தொடர்ந்து பேட்டிங் செய்ததாக கூறியுள்ளார்.

Sachin 1

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னுடைய முதல் டெஸ்ட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றது. 4 போட்டிகள் கொண்ட அத்தொடரின் முதல் 3 போட்டிகள் டிராவில் முடிந்த நிலையில் நான் கடைசி போட்டியில் களமிறங்கினேன். குறிப்பாக 36/4 என்ற நிலைமையில் இந்தியா தவித்த போது நான் களமிறங்கினேன். அந்த காலங்களில் முன் பகுதியில் பாதுகாப்பில்லாத ஹெல்மெட் இருந்த நிலையில் வக்கார் யூனிஸ் வீசிய பவுன்சர் பந்து எனது மூக்கில் பட்டது. அதனால் எனது மூக்கு உடைந்து ரத்தம் வந்தது”

- Advertisement -

“அதனால் போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் அது ஒரு முக்கியமான தருணம் என்பதை உணர்ந்தார்கள். குறிப்பாக நான் மட்டும் அந்த சமயத்தில் களத்தில் இருந்து வெளியேறியிருந்தால் மேற்கொண்டு அவர்கள் அதிரடியாக விளையாடி வென்றிருப்பார்கள். ஏனெனில் அவர்கள் அப்போட்டியில் வென்று தொடரையும் சொந்த மண்ணில் கைப்பற்றும் முனைப்புடன் இருந்தார்கள். அந்த சமயத்தில் என்னை சுற்றி இருந்த பாகிஸ்தான் வீரர்களில் ஜாவேத் மியன்தத் எப்படி பேசுவார் என்பது உங்களுக்கே தெரியும்”

Sachin

“அவர் என்னிடம் வந்து உனது மூக்கு உடைந்து விட்டது பேசாமல் மருத்துவமனைக்கு சென்று விடு என்று கூறினார். ஆனால் இம்ரான் கான் அவரிடம் ஜாவேத் அவரை விட்டு விடுங்கள் என்று கூறுகிறார். அதனால் நான் பேட்டிங்கை தொடர்ந்தேன். அது போன்ற ஒரு காயம் உங்களை உடைக்கலாம் என்று நான் உணர்ந்த ஒரு தருணம் அதுவாகும். இருப்பினும் நான் டிரஸ்ஸிங் ரூமுக்கு செல்லாமல் அங்கேயே தொடர்ந்து பேட்டிங் செய்தேன். அதனால் நாங்கள் அப்போட்டியையும் தொடரையும் டிரா செய்தோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: தோனி குருவாக இருந்தாலும் பிரட் லீ, அக்தரையே தெறிக்க விட்ட அவர் தான் அதிரடியில் என் ரோல் மாடல் – இஷான் கிசான் ஓப்பன்டாக்

அபோட்டியில் முதல் இன்னிங்ஸில் 35 ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கர் 2வது இன்னிங்ஸில் மூக்கில் காயத்தை சந்தித்தும் களத்திலிருந்து வெளியேறாமல் 57 ரன்கள் குவித்து போராடி இந்தியா டிரா செய்ய உதவினர். அதன் காரணமாக யாருக்கும் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்த இத்தொடரை இரு அணியும் பகிர்ந்து கொண்டன. அப்படி 16 வயதிலேயே அதிகப்படியான சவாலை எதிர்கொண்ட காரணத்தாலேயே நாளடைவில் சச்சின் மிகப்பெரிய ஜாம்பவானாக உருவெடுத்தார் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement