இப்படியே பண்ணா நீ வீட்டுக்கு போக வேண்டியது தான். இளம்வீரரை கண்டித்த கேப்டன் சச்சின் – அவரே பகிர்ந்த தகவல்

Sachin Tendulkar Sreesanth
- Advertisement -

இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திரம் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாறு கண்ட மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். குறிப்பாக 16 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஆரம்ப காலங்களிலேயே வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை எதிர்கொண்டு நாட்கள் செல்ல செல்ல மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக அவதரித்து ரன் மெஷினாக செயல்பட்டு இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.

Sachin-Tendulkar

- Advertisement -

அதிலும் 90களில் அவர் அடித்தால் தான் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அனைத்து ரசிகர்களிடமும் காணப்பட்டது. அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக பெரும்பாலான போட்டிகளில் அசத்திய அவர் 24 வருடங்களாக சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்திய பேட்டிங்கை தன் தோள் மீது சுமந்தார். அந்த காலகட்டங்களில் மறக்க முடியாத சார்ஜா கொக்ககோலா கோப்பை முதல் 2011 உலகக்கோப்பை வரை இந்தியாவுக்கு ஏராளமான கோப்பைகளை வென்று கொடுத்த அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரராக சாதனை படைத்துள்ளார்.

மேலும் அந்த காலத்தில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10,000 ரன்கள் குவித்த வீரர், இப்போதும் 30000+ ரன்களை குவித்த ஒரே வீரர், 100 சதங்கள் அடித்தவர், ஒருநாள் கிரிக்கெட்டில் குதிரை கொம்பாக பார்க்கப்பட்ட இரட்டை சதத்தை எப்படி அடிக்க வேண்டும் என்று இந்த உலகத்தை கற்றுக் கொடுத்த வீரர் போன்ற நிறைய வரலாற்றுச் சாதனைகளையும் படைத்துள்ளார். அந்தளவுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சாதாரண வீரராக மகத்தான சாதனைகளை படைத்த அவர் கேப்டனாக சுமாராகவே செயல்பட்டார்.

sachin

ஸ்ட்ரிக்ட் கேப்டன்:
குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 25 போட்டிகளில் இந்தியாவை வழி நடத்திய அவரால் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றுக் கொடுக்க முடிந்தது. 9 தோல்விகளையும் 12 ட்ராவையும் சந்தித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் 73 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்து 31% என்ற சுமாரான சராசரியில் தான் வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். ஆனால் வெற்றிகள் மட்டும் சிறந்த கேப்டனின் பண்பல்ல அணி வீரர்களிடம் கட்டுகோப்பாக நடந்து கொள்வதும் முக்கிய பண்பு என்பார்கள்.

- Advertisement -

அந்த வகையில் தாம் கேப்டன்ஷிப் செய்த காலத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு தொடரில் இளம் இந்திய வீரர் ஒருவர் ரசிகர்களுடன் தேவையற்ற செயல்களில் ஈடுபட்ட போது “இப்படி செய்தால் வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவேன்” என்று கண்டிப்புடன் நடந்து கொண்டதாக சச்சின் மனம் திறந்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் அப்போது அணியின் கேப்டனாக இருந்தேன். நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தோம். அந்த சுற்றுப்பயணத்தில் எங்களின் ஜூனியர் வீரர் அப்போது தான் முதல் இந்தியவுக்காக முறையாக விளையாடினார்”

sachin

“குறிப்பாக ஒரு போட்டியில் பந்தை துரத்திச் சென்று அவர் ரசிகர்களிடம் கவனத்தை வைத்து அவர்களிடம் விளையாட்டு தனமாய் நடந்து கொண்டதால் எதிரணி சிங்கிள் எடுப்பதற்கு பதிலாக 2 ரன்கள் எடுத்தது. அதனால் அவரது அருகே சென்ற நான் அவரது தோள் மீது கை போட்டு பேசினேன். அப்போது நான் அவரிடம் என்ன சொன்னேன் என்பதை இதர வீரர்கள் அறிய மாட்டார்கள். ஆனால் அவர் அதை மீண்டும் செய்ய முடியாத அளவுக்கு நான் ஒன்று சொன்னேன். அதாவது “நீ இதை மீண்டும் செய்தால் நான் உன்னை நேராக வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவேன். நீ ஹோட்டலுக்கு கூட செல்ல மாட்டாய். நேராக இந்தியாவுக்கு திரும்பி விடுவாய்” என்று அவரை கடுமையாக எச்சரித்தேன்”

இதையும் படிங்க: ஐபிஎல் தொடரில் கழற்றி விட்டாலும் பிஎஸ்எல் தொடரில் பெரிய தொகைக்கு விலை போன 5 வெளிநாட்டு வீரர்கள்

“ஏனெனில் இந்தியாவுக்காக விளையாடும் போது நீங்கள் எதையுமே ஏற்றுக்கொள்ள முடியாது. அது மிகப்பெரிய கௌரவமாகும். அதிலும் குறிப்பாக நீங்கள் விளையாடும் இடத்தில் இருப்பதற்கு லட்சக்கணக்கான மக்கள் ஆசைப்படுகிறார்கள். எனவே அதை துச்சமாக நினைக்காதீர்கள்” என்று தேசப்பற்றுடன் கண்டிப்பான கேப்டனாக நடந்து கொண்டதாக தெரிவித்தார்.

Advertisement