டி20 உ.கோ செமி பைனலில் விளையாடப்போகும் அணிகள் அவர்கள்தான் – சச்சின் டெண்டுல்கரின் கணிப்பு

Sachin
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சர்வதேச டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் இத்தொடரின் கோப்பையை வெல்வதற்கு உலகின் டாப் 16 அணிகள் 45 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இத்தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஆசிய சாம்பியன் இலங்கையை நமீபியாவும் வெற்றிகரமான வெஸ்ட் இண்டீஸ் அணியை ஸ்காட்லாந்தும் தோற்கடித்து ஆரம்பத்திலேயே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்ப்டுத்தியுள்ளது.

T20 World Cup Captains 2022

- Advertisement -

இப்படி முதன்மை சுற்றான சூப்பர் 12 சுற்று துவங்குவதற்கு முன்னறே ஆச்சர்யங்களை கொடுத்துள்ள இந்த உலகக் கோப்பை நிச்சயம் இன்னும் நிறைய எதிர்பாராத திருப்பங்களை கொடுக்க காத்திருக்கிறது என்றே கூறலாம். இருப்பினும் லீக் சுற்றை கடந்து நாக்-அவுட் சுற்றில் அசத்தி கோப்பையை வெல்லும் அணிகளாக நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய 3 அணிகள் கருதப்படுகின்றன.

ஏனெனில் சொந்த மண்ணில் நிலவும் சூழ்நிலைகளை பயன்படுத்தி ஆஸ்திரேலியாவும், உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியாவும், அதிரடியாக விளையாடும் அணுகு முறையை கொண்டுள்ள இங்கிலாந்தும் உண்மையாகவே கோப்பையை வெல்லும் அணிகளாக திகழ்கின்றன. அதே சமயம் டி20 கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையில் பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் தரமான வீரர்களை கொண்டுள்ளன. அதனால் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறப் போகும் 4 கிரிக்கெட் அணிகள் யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் நிலவுகிறது.

சச்சினின் அசத்தல் கணிப்பு:
இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெற 6 அணிகளுக்கு வாய்ப்புள்ளதாக இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கணித்துள்ளார். அதில் குரூப் 2 பிரிவில் இந்தியா முன்னேறும் என்று தெரிவிக்கும் அவர் பாகிஸ்தான் பேட்டிங்கில் தடுமாறும் பட்சத்தில் தென் ஆப்ரிக்கா கருப்பு குதிரையாக உள்ளே நுழையும் என்றும் கூறியுள்ளார். அதே போல குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து கருப்பு குதிரையாக செயல்படும் என்று தெரிவிக்கும் அவர் என்னதான் சொந்த மண்ணில் விளையாடினாலும் ஆஸ்திரேலியாவை விட இங்கிலாந்துக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “குரூப் 2 பிரிவிலிருந்து இந்தியாவுடன் அரையிறுதிக்கு செல்லும் அணியாக பேட்டிங்கில் அசத்தும் பட்சத்தில் பாகிஸ்தானை நான் தேர்வு செய்கிறேன். ஒருவேளை அவர்கள் பேட்டிங்கில் சொதப்பினால் தென் ஆப்ரிக்கா கருப்பு குதிரையாக செயல்படும். ஏனெனில் தற்போதைய செப்டம்பர் – அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நிலவக்கூடிய கால சூழ்நிலையும் அவர்களது நாட்டில் நிலவும் கால சூழ்நிலையும் ஒரே மாதிரியானது. அதிலும் டிசம்பர் – ஜனவரி ஆகிய மாதங்களை ஒப்பிடும் போது தற்போதுள்ள ஆஸ்திரேலிய மைதானங்கள் அவர்கள் விளையாடி அனுபவத்தை பெற்றுள்ள சற்று மென்மையான மைதானங்களை போன்றே இருக்கும்”

sachin

“மற்றொரு பிரிவில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறலாம். மேலும் அந்த பிரிவில் நியூசிலாந்து கருப்பு குதிரையாக செயல்படும். ஏனெனில் அவர்களது நாட்டில் இருக்கும் கால சூழ்நிலையே கிட்டதட்ட ஆஸ்திரேலியாவில் இருக்கும். ஆனால் அந்த 2 அணிகளை விட இங்கிலாந்துக்கு நான் அதிக மதிப்பை கொடுப்பேன்” என்று கூறினார். மேலும் ஆரம்பத்திலேயே நமீபியா, ஸ்காட்லாந்து போன்ற அணிகள் பெரிய அணிகளை தோற்கடித்ததைப் போல் இந்த உலக கோப்பையில் நிறைய திருப்பங்கள் காத்திருப்பதாக தெரிவிக்கும் அவர் இது போன்ற வெற்றிகள் சிறிய அணிகளும் உலக அரங்கில் ஜொலிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதாக பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “டி20 கிரிக்கெட்டில் எப்போதுமே இடைவெளி குறைவாக இருக்கும். அதை 10 அணிகள் கொண்ட தொடராக நடத்தினால் அதன் இடைவெளி மேலும் குறையும். அடிப்படையாகவே பெரிய தொடராக இருந்தால் இதுபோன்ற அதிர்ச்சி முடிவுகள் கிடைப்பது சகஜமாகும். அது போன்ற சிறிய அணிகள் டி20 கிரிக்கெட்டில் வளர்ந்து வருகின்றன. இந்த வெற்றிகள் அந்த சிறிய நாடுகளால் டி20 கிரிக்கெட்டில் என்ன செய்ய முடியும் என்பதை காட்டியுள்ளது.

இதையும் படிங்க : டி20 உலககோப்பை : மேலும் ஒரு ஸ்டார் பேட்டருக்கு காயமா? – புகைப்படத்தால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம்

என்னைக் கேட்டால் அந்த சிறிய அணிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இத்தொடரில் நமக்கு ஆச்சரியத்தை கொடுக்க வந்துள்ளதாக கருதுகிறேன். சொல்லப் போனால் ஆரம்பத்திலேயே 2 ஆச்சரியங்கள் கிடைத்துள்ள நமக்கு இந்த தொடரில் மேலும் நிறைய ஆச்சரியங்கள் கிடைக்கலாம்” என்று கூறினார்.

Advertisement