இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்துள்ளார். அத்துடன் 100 சதங்கள் அடித்த ஒரே வீரராகவும் சாதனை படைத்துள்ள அவர் ரெடிட் சமூக வலைதளப்பக்கத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் அவ்வப்போது ரசிகர்கள் எழுப்பும் கேள்விக்கு நேரலையில் சச்சின் பதிலளித்து வருகிறார்.
அந்த வகையில் “கிரிக்கெட்டில் நீங்கள் மாற்ற விரும்பும் ஒரு விதிமுறை என்ன?” என்று அவரிடம் ரசிகர் கேட்டார். அதற்கு அம்பயர்ஸ் கால் விதிமுறையை மாற்ற விரும்புவதாக சச்சின் டெண்டுல்கர் பதிலளித்தார். அதாவது கிரிக்கெட்டில் நடுவர்கள் வழங்கும் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக முறையிட்டு மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் விதிமுறை இருக்கிறது.
மாற்றப்பட வேண்டிய விதிமுறை:
அதில் எல்பிடபுள்யூ வகையிலான விக்கெட்டை சோதிக்கும் போது பந்து ஏதேனும் ஸ்டம்ப் மேலே முழுமையாக அடிப்பது அவசியமாகும். ஒருவேளை லேசாக உரசுவது போல தெரிந்தால் 3வது நடுவர் கள நடுவரின் தீர்ப்பை (அம்பயர்ஸ் கால்) மீண்டும் வழங்குவார். எடுத்துக்காட்டாக அது போன்ற சூழ்நிலையில் கள நடுவர் அவுட் வழங்கியிருந்தால் 3வது நடுவர் மீண்டும் அவுட் வழங்குவார்.
கள நடுவர் விக்கெட் கொடுக்காமல் இருந்திருந்தால் 3வது நடுவர் நாட் அவுட் கொடுத்து விடுவார். அதனால் கடைசியில் அந்த மறுபரீசலனை செய்வதால் எந்த பயனும் கிடைப்பதில்லை. எனவே எல்பிடபுள்யூ தீர்ப்புகளில் அம்பயர்ஸ் கால் விதிமுறை மாற்றப்பட வேண்டும் என்று சச்சின் தெரிவித்துள்ளார்.
சச்சின் கருத்து:
இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு. “நான் டிஆர்எஸ் விதிமுறையில் அம்பயர் கால் பகுதியை மாற்றுவேன். ஏனெனில் களத்தில் இருக்கும் நடுவர் கொடுத்த தீர்ப்பில் திருப்தி இல்லாத காரணத்தாலேயே வீரர்கள் அதை மறுபரிசீலனை செய்கின்றார்கள். எனவே நீங்கள் மீண்டும் அந்த பழைய தீர்ப்பை எடுப்பதற்கான ஆப்ஷன் இருக்கக் கூடாது”
இதையும் படிங்க: பணம் முக்கியமில்லாத அஸ்வின் ஏன் இதை செஞ்சாரு தெரியல.. இந்திய வீரர்களுக்கு நல்லது செஞ்சுருக்காரு.. ஸ்ரீகாந்த்
“வீரர்கள் மோசமான ஃபார்மில் இருப்பது போலவே நடுவர்களும் சில நேரங்களில் மோசமான ஃபார்மில் இருப்பார்கள். அவர்களின் தீர்ப்பு துல்லியமற்றதாக இருக்கும் போது கூட தொழில்நுட்பம் தொடர்ந்து துல்லியமாக இருக்கும்” என்று கூறினார். இது போக விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரும் கேப்டனாக இருந்த போது அந்த விதிமுறைக்கு எதிராக குரல் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.



