நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் இந்தியா இழந்துள்ளது. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்துள்ளது.
இதன் காரணமாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறுவதும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொள்ளாதது முக்கிய காரணமானது. இந்நிலையில் இந்திய அணிக்கு என்ன தான் ஆயிற்று என்று சுயபரிசோதனை செய்ய வேண்டுமென ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
சச்சின் அதிருப்தி:
இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது. “3 – 0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் தோல்வியை சந்திப்பது கடினமாக விழுங்க வேண்டிய மாத்திரை. அது சுயபரிசோதனையையும் அழைக்கிறது. இது தயாராவதில் தவறு நடந்ததாலா? சுமாரான ஷாட் செலக்சன் காரணமாகவா? சுமாரான பயிற்சி காரணமாகவா? என்று சோதிக்க வேண்டும்” எனக் கூறினார்.
மேலும் பேட்டிங்கில் சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் அசத்தியதாக பாராட்டியுள்ள சச்சின் 2 இன்னிங்சிலும் ரிஷப் பண்ட் அற்புதமாக விளையாடியதாகவும் பாராட்டியுள்ளார். இது ஒரு புறமிருக்க இந்தியாவின் இந்த தோல்விக்கு பிட்ச் தான் காரணம் என்று முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
தோல்விக்கான காரணம்:
“யூசுப் தான் பாயுடன் நேற்று இது பற்றி திடமான பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர் இந்தியாவின் உள்ளூர் போட்டிகள் பற்றி நியாயமான கருத்தைத் தெரிவித்தார். அதாவது இப்போதெல்லாம் நாம் உள்ளூரில் ஒன்று ஃபிளாட்டான பிட்ச்சில் விளையாடுகிறோம் அல்லது பச்சை புற்கள் கூடிய பிட்ச்சில் விளையாடுகிறோம். அரிதாக மட்டுமே இது போன்ற சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் விளையாடுகிறோம்”
இதையும் படிங்க: அப்போவே சொன்னேன் கேட்கல.. விராட், ரோஹித் சொதப்பலுக்கு இதான் காரணம்.. கவாஸ்கர் பேட்டி
“மேலும் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற நம்முடைய டாப் வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. இது இந்தியாவை நீண்ட காலம் பின்னடைவு ஏற்படுத்தலாம்” என்று கூறினார். மொத்தத்தில் தொடர் தோல்விகளால் இந்திய அணி சொந்த மண்ணில் தலை குனிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



