ப்ளாங்க் செக்ல கோடிகள் கொடுத்தாங்க ஆனா அப்பாவுக்கு செய்த சத்தியத்தால் வேணாம்னு சொல்லிட்டேன் – சச்சின் நெகிழ்ச்சி

sachin
- Advertisement -

நட்சத்திர இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013இல் ஓய்வு பெற்றாலும் இப்போதும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 1989இல் தனது 16 வயது பிஞ்சு கால்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே நிரந்தர இடத்தைப் பிடித்து வாசிம் அக்ரம் முதல் ஷேன் வார்னே வரை உலகின் அத்தனை டாப் பவுலர்களையும் எதிர்கொண்ட அவர் இந்தியாவுக்கு ஏராளமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக 90களில் சச்சின் அடித்தால் வெற்றி பெறும் என்றிருந்த நிலைமையில் பல போட்டிகளில் ரசிகர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்ட அவர் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக ரன்களை அடித்து சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேனாக உருவெடுத்தார்.

Sachin

- Advertisement -

மேலும் ஓரிரு வருடங்கள் நிலையாக விளையாடி ஓரிரு சதங்கள் அடிப்பதற்கு தடுமாறும் பல பேட்ஸ்மேன்களுக்கு மத்தியில் காயம் மற்றும் ஃபார்ம் ஆகிய அனைத்தையும் கடந்து 24 வருடங்கள் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 30000க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி 100 சதங்களை அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் இப்போதும் பேட்டிங் துறையில் இருக்கும் பெரும்பாலான சாதனைகளை தன்வசம் வைத்துள்ளார். அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் குதிரை கொம்பாக பார்க்கப்பட்ட இரட்டை சதத்தை முதல் முறையாக விளாசி எப்படி அடிக்க வேண்டும் என்ற கலையை உலகிற்கே காண்பித்த அவர் 1998 கோகோ-கோலா கோப்பை முதல் 2011 உலகக் கோப்பை வரை இந்தியாவின் பல சரித்திர வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

அப்பாவின் சாத்தியம்:
அதனால் எம்எஸ் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற இப்போதிருக்கும் ஜாம்பவான் வீரர்களுக்கும் இளம் வீரர்களுக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் சச்சின் மிகப்பெரிய ரோல் மாடலாக ஜொலித்து வருகிறார். அப்படி கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் அவர் 90களில் நடித்த விளம்பரங்கள் மிகவும் பிரபலமாகும். குறிப்பாக பூஸ்ட் இஸ் சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி என்று அவர் சொன்ன வார்த்தைகள் இப்போதும் 90ஸ் கிட்ஸ் ரசிகர்களின் மனதில் நிலைத்துள்ளது.

sachin

அந்த வகையில் இந்தியாவிலேயே விளம்பரங்களில் நடித்து பல கோடிகளை சம்பாதித்த முதல் விளையாட்டு வீரராக போற்றப்படும் சச்சின் ஒருமுறை பிரபல புகையிலை நிறுவனம் தம்மிடம் “பிளாங்க் செக்” கொடுத்து எவ்வளவு கோடிகள் வேண்டுமானாலும் தருகிறோம் தங்களது விளம்பரத்தில் நடியுங்கள் என்று கேட்டதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் ரோல் மாடலாக இருக்கும் தாம் எவ்வளவு கோடிகள் கொடுத்தாலும் இளைஞர்களின் வாழ்க்கையை கெடுக்கும் விளம்பரங்களில் நடிக்க கூடாது என்று தமது தந்தைக்கு கொடுத்த சத்தியத்தால் அதை மறுத்து விட்டதாக சச்சின் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி மே 31ஆம் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பள்ளியிலிருந்து வெளியே வந்த குறுகிய காலத்திலேயே இந்தியாவுக்காக நான் விளையாட துவங்கினேன். அந்த சமயத்தில் விளம்பரங்களில் நடிக்க எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. அப்போது எந்த சூழ்நிலையாக இருந்தாலும் புகையிலை பொருட்களுக்கான விளம்பரத்தில் மட்டும் நடிக்காதே என்று எனது அப்பா கூறினார். அதன் காரணமாக அது போன்ற விளம்பரங்கள் நிறைய வந்தும் நான் மறுத்து விட்டேன்”

sachin

“அந்த சத்தியத்தை நான் எனது தந்தைக்கு செய்து கொடுத்துள்ளேன். குறிப்பாக ரோல் மாடலாக இருக்கும் உன்னை அனைவரும் பின்பற்றுவார்கள் என்பதை நினைவில் கொள்ளுமாறு எனது அப்பா என்னிடம் கூறியுள்ளார். அதனாலேயே நான் மது மற்றும் புகையிலை சம்பந்தமான விளம்பரங்களில் நடிப்பதில்லை. 1990இல் என்னுடைய பேட்டில் ஸ்டிக்கர் இல்லை. அப்போது அதற்கு வில்ஸ் மற்றும் ஃபோர் ஸ்கொயர் போன்ற நிறுவனங்கள் ஸ்பான்சராக வந்தன. இருப்பினும் எனது தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறக் கூடாது என்பதால் அதை மறுத்து விட்டேன்”

இதையும் படிங்க: WTC Final : அந்த 2 இந்திய பவுலர்களை நெனச்சா தான் பக்குனு இருக்கு – டேவிட் வார்னர் வெளிப்படை

“குறிப்பாக அந்த நிறுவனங்கள் தங்களுடைய மதிப்பை அதிகப்படுத்துவதற்காக ப்ளாங்க் செக் போட்டு எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்ன போதிலும் அதை எனது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த வகையில் என்னுடைய அப்பாவுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை இப்போதும் காப்பாற்றி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement