கிரிக்கெட்டின் கடவுள்னு சொன்ன சச்சினுக்கு எதிராகவே நான் அதை செய்திருக்கேன் – சோயப் அக்தர்

sachin
- Advertisement -

இந்தியாவை சேர்ந்த நட்சத்திரம் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வெறும் 16 வயதிலேயே பிஞ்சு கால்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் வாசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்கள் நிறைந்த பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக 1989இல் அறிமுகமானார். அந்த இளம் வயதிலேயே அந்த தரமான பவுலர்களை முடிந்த அளவு சிறப்பாக எதிர்கொண்ட அவர் ஒவ்வொரு வருடம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி 90களில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக அவதரித்தார். அதன்பின் கிளன் மெக்ராத், பிரட் லீ, ஷேன் வார்னே என உலகின் அனைத்து தரமான பவுலர்களையும் அபாரமாக எதிர்கொண்ட அவர் இந்திய பேட்டிங் துறையில் முதுகெலும்பாக உருவெடுத்தார்.

Shoaib-Akhtar-Sachin-Tendulkar
Shoaib-Akhtar-Sachin-Tendulkar

குறிப்பாக 90களில் அவர் அடித்தால்தான் இந்தியா வெற்றி பெறும் என்ற நிலைமையில் இந்திய பேட்டிங்கை தோள் மீது சுமந்து வந்த அவர் பெரும்பாலான தருணங்களில் இந்தியாவை சரிய விடாமல் ஒரு ரன் மெஷினாக ரன்களையும் சதங்களை அடித்து பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார். மொத்தம் 30000கும் மேற்பட்ட ரன்கள் 100 சதங்கள் என சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள், சதங்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள அவர் இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக போற்றப்படுகிறார்.

- Advertisement -

சச்சின் – அக்தர்:
அப்படிபட்ட தனது 24 வருட கேரியரில் அவர் எதிர்கொண்ட எத்தனையோ தரமான பவுலர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த சோயப் அக்தர் முக்கியமானவர் என்றே கூறலாம். ஏனெனில் கிட்டத்தட்ட பவுண்டரி எல்லையின் அருகிலிருந்து அதிவேகமாக ஓடிவரும் அவர் பேட்ஸ்மேன்களை அவுட் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிரடியான வேகத்தில் பந்து வீசுவார். அதிலும் இந்திய ரசிகர்கள் தங்களது ஹீரோவாக கொண்டாடும் சச்சின் டெண்டுல்கரை பார்த்தால் வேண்டுமென்றே அவரை எப்படியாவது அவுட் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சற்று கூடுதல் வேகத்தில் வீசுவார்.

Akhtar

அதனால் 2000 வாக்கில் சச்சின் டெண்டுல்கர் – சோயப் அக்தர் மோதும் போட்டிகள் உலக அளவில் பிரசித்தி பெற்றதாக இருந்தது. அதில் பல முறை தரமான சச்சின் டெண்டுல்கர் தனது அபார திறமையால் பவுண்டரிகளை அடித்து சோயப் அக்தருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். குறிப்பாக 2003 உலக கோப்பையில் அவர் வீசிய அதிவேகமான பந்தை அசால்ட்டாக அடித்த சிக்சரை யாருமே மறந்திருக்க முடியாது. இருப்பினும் ஒரு சில தருணங்களில் சச்சினை வெற்றிகரமாக அக்தரும் அவுட் செய்துள்ளார்.

- Advertisement -

கடவுள்னு சொன்னாங்க:
இந்த நிலைமையில் கடந்த 1999இல் உலகப் புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியின்போது நட்சத்திர பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் முதல் முறையாக சச்சினை கிரிக்கெட்டின் கடவுள் என்று தம்மிடம் தெரிவித்ததாக சோயப் அக்தர் கூறியுள்ளார். அதனால் அப்படிப்பட்ட தரமான அவரை அந்த போட்டியிலேயே அவுட் செய்து காட்டுகிறேன் என்று சக்லைன் முஷ்டாக்க்கு பதிலளித்ததாக தெரிவிக்கும் அவர் இறுதியில் அதை செய்தும் காட்டியதாக மலரும் நினைவுகளை கூறினார். இதுபற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“அப்போட்டியில் சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் மைதானத்தில் நிரம்பி இருந்தனர். சிலர் வெளியில் காத்திருந்தனர். அப்போது பெரும்பாலான ரசிகர்கள் கிரிக்கெட்டின் கடவுள் என்று ஒரு இந்திய வீரரை அழைத்தார்கள். அதனால் வியப்படைந்த நான் சக்லைன் முஷ்டாக்கிடம் “யார் அது” என்று கேட்டேன். அதற்கு “இந்தியாவில் சச்சினை தான் ரசிகர்கள் அவ்வாறு கொண்டாடுகிறார்கள்” என்று அவர் பதிலளித்தார். அத்துடன் அவரை கடைசியாக சந்தித்த 2 போட்டிகளிலும் தாம் அவுட் செய்ததாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார். அதற்கு “அவரை நான் அவுட் செய்தால் என்ன நடக்கும்” என்று அவரிடம் பதிலளித்தேன்”

- Advertisement -

“அந்த வகையில் எங்களிடையே சச்சினை அவுட் செய்யப்போவது யார் என்ற நட்பு ரீதியான போட்டி ஏற்பட்டது. அப்போட்டியில் ராகுல் டிராவிட் அவுட்டான பின் சச்சின் பேட்டிங் செய்ய வந்தார். மெதுவாக நடந்து வந்த அவர் எப்போது தான் பேட்டிங் செய்யத் தொடங்குவார் என்ற வகையில் அலுத்துப் போனேன். இறுதியில் அந்தப் போட்டியின் முடிவில் “சோயப் நீ சொன்னதை செய்து காட்டி விட்டாய்” என்று சக்லைன் மகிழ்ச்சியுடன் என்னை பாராட்டினார்” என கூறினார்.

இதையும் படிங்க : உலக அளவில் நம்பர் ஒன் தொடராக ஐபிஎல் – ஆங்கிலேயர்களை முந்தி இந்தியா பெருமைபடும் சாதனை

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 185 ரன்கள் எடுத்த நிலையில் அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியாவிற்கு உண்மையாகவே சோயப் அக்தர் சொன்னதைப் போல் சச்சின் டெண்டுல்கரை முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் செய்து மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்தார். அதனால் இந்தியா 223 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் 2-வது இன்னிங்சில் 316 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் பின்னர் இந்தியாவை 232 ரன்களுக்கு அவுட் செய்து 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement