இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து இரண்டாவது போட்டியில் தோற்கடித்த இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. அடுத்ததாக 3வது டெஸ்ட் போட்டி ஜூன் 10ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அப்போட்டிக்கு முன்பாக கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு 2 கௌரவம் வழங்கப்பட்டது. 16 வயதில் அறிமுகமான சச்சின் உலகின் அனைத்து டாப் பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
லார்ட்ஸில் 2 கெளரவம்:
அந்த 100 சதங்களுக்கு அடித்தளமாக அமைந்த முதல் சதத்தை சச்சின் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் அடித்ததை மறக்க முடியாது. அத்துடன் சர்வதேச மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக உலக சாதனை படைத்துள்ள அவர் இந்தியாவுக்கு நிறைய பெற்றுக் கொடுத்துள்ளார். அந்த வகையில் கிரிக்கெட்டின் முக்கிய அடையாளமாக திகழும் சச்சின் பலருக்கும் ரோல் மாடலாக திகழ்கிறார்.
அப்படிப்பட்ட மகத்தான சச்சின் டெண்டுல்கரின் உருவப்படம் இன்று லார்ட்ஸ் மைதானத்தில் இருக்கும் அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது. அங்குள்ள அருங்காட்சியகத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கிரிக்கெட்டின் வரலாற்று பொருட்கள், நிகழ்வுகள், வீரர்கள் மற்றும் நடுவர்களின் புகைப்படங்கள் உள்ளன. அப்படிப்பட்ட பழமை வாய்ந்த அருங்காட்சியகத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு உருவப்படத்தை கௌரவமாக வழங்கி லார்ட்ஸ் மைதானம் பாராட்டியுள்ளது.
சச்சின் நெகிழ்ச்சி:
அதை சச்சின் மற்றும் எம்சிசி தலைவர் மார்க் நிக்கோலஸ் ஆகியோர் திறந்து வைத்தார்கள். அது போக இன்றைய முதல் நாள் ஆட்டத்தை லார்ட்ஸ் மைதானத்தில் இருக்கும் மணியை அடித்து துவங்கி வைப்பதற்கான கௌரவமும் சச்சினுக்கு வழங்கப்பட்டது. அவர் மணியை அடித்து ஆட்டத்தை துவங்கி வைத்த போது ரசிகர்கள் கைதட்டி விசிலடித்து பாராட்டினர்.
இதையும் படிங்க: ஒரே ஒரு மாற்றத்துடன் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்த கேப்டன் கில் – செம டீம் தான்
லார்ட்ஸ் மைதானத்தில் கிடைத்துள்ள இந்த கௌரவங்கள் பற்றி சச்சின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “முதன்முதலில் நான் 1988இல் இளம் வயதில் லார்ட்ஸ் மைதானத்திற்கு சென்று 1989இல் ஸ்டார் க்ளப் அணியுடன் திரும்பினேன். அங்கே பெவிலியன் அருகே நின்று வரலாற்றில் திளைத்து அமைதியாக கனவு கண்டது நினைவிருக்கிறது. அங்கே இன்று எனது உருவப்படம் திறக்கப்படுவது என்பது சொல்ல முடியாத ஒரு உணர்வு. உண்மையிலேயே வாழ்க்கை ஒரு முழு வட்டத்திற்கு வந்துள்ளது. நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அற்புதமான நினைவுகளால் நிரம்பினேன்” என்று பதிவுத்துள்ளார்.



