பர்மிங்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 407 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் செய்தது. 5 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அந்த சூழ்நிலையில் ஜூலை 2ஆம் தேதி பர்மிங்காமில் துவங்கிய இரண்டாவது போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா அபாரமாக பேட்டிங் செய்து 587 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269, ரவீந்திர ஜடேஜா 89, ஜெய்ஸ்வால் 87, வாசிங்டன் சுந்தர் 42 ரன்கள் குவித்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்துக்கு ஜோ ரூட் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்ததால் 87/5 என தடுமாறியது.
மிரட்டிய சிராஜ்:
அப்போது ஜோடி சேர்ந்த ஹரி ப்ரூக் – ஜேமி ஸ்மித் ஆகியோர் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து அதிரடியாக விளையாடி 303 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். அதனால் இந்திய ரசிகர்கள் கவலையடைந்த நிலையில் ஹரி ப்ரூக்கை 158 ரன்னில் கிளீன் போல்டாக்கிய ஆகாஷ் தீப் அடுத்ததாக வந்த கிறிஸ் ஓக்ஸை 5 ரன்னில் காலி செய்தார். அதைப் பயன்படுத்திய சிராஜ் அடுத்ததாக வந்த கார்ஸ், ஜோஸ் டாங், சோயப் பசீர் ஆகியோரை டக் அவுட் செய்து மிரட்டினார்.
அதனால் இங்கிலாந்தை விரைவாக சுருட்டிய இந்தியா 180 ரன்கள் முன்னிலை பெற்றது. உண்மையில் கடந்தப் போட்டியில் பும்ராவை தவிர்த்து மற்ற பவுலர்கள் சுமாராக விளையாடியது இந்தியாவின் தோல்விக்கு காரணமானது. அதனால் பும்ரா ஓய்வெடுக்கும் இப்போட்டியில் இந்தியா திணறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சச்சின் பாராட்டு:
ஆனால் பும்ரா இடத்தில் முதன்மை பவுலராக பொறுப்புடன் செயல்பட்ட சிராஜ் 6, பும்ராவுக்கு பதிலாக வந்த ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை முன்னிலைப்படுத்தியுள்ளார்கள். இந்நிலையில் சரியான இடத்தில் தொடர்ந்து துல்லியமாக பந்துகளை பிட்ச் செய்ததே சிராஜ் 6 விக்கெட்டுகள் எடுக்கக் காரணம் என்று ஜாம்பவான் சச்சின் பாராட்டியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
இதையும் படிங்க: கவாஸ்கரின் 49 வருட சாதனையை உடைத்த ஜெய்ஸ்வால்.. சேவாக், டிராவிட் சாதனையையும் சமன் செய்து அபாரம்
“சிராஜிடம் நான் கவனித்த மிகப்பெரிய மாற்றம் என்னவெனில், பந்தை சரியான பகுதிகளில் தரையிறக்குவதில் அவருடைய துல்லியம் மற்றும் நிலைத்தன்மையாகும். அதைப் பயன்படுத்தி விடாமுயற்சி செய்த அவருக்கு 6 விக்கெட்டுகள் பரிசாக கிடைத்துள்ளது. ஆகாஷ் தீப்பும் திறமையுடன் அவருக்கு ஆதரவளித்தார். வெல்டன். அழுத்தத்தின் கீழ் ப்ரூக் – ஸ்மித் பார்ட்னர்ஷிப் அழகாக பதிலடிக் கொடுத்து இங்கிலாந்தை நாம் எதிர்பார்த்ததை விட இந்தியாவின் ஸ்கோருக்கு நெருக்கமாக கொண்டு வந்தது” என்று பதிவிட்டுள்ளார்.