
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியுடன் இங்கிலாந்தின் நட்சத்திர ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 2002இல் அறிமுகமாகி தன்னுடைய அனுபவத்தால் சாதிக்கக் துவங்கிய அவர் விராட் கோலி போன்ற நிறைய தரமான பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்தவர்.
அதை விட டி20 கிரிக்கெட்டின் வருகையால் பல பவுலர்கள் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டு வருகின்றனர். ஆனால் 41 வயதிலும் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் விரும்பி விளையாடிய அவர் 188 போட்டிகளில் 704 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான் சச்சினுக்கு பின் (200) அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
வாழ்த்திய சச்சின்:
அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றையும் ஆண்டர்சன் நிகழ்த்தியுள்ளார். அதனால் அவருக்கு இங்கிலாந்து வீரர்களும் ரசிகர்களும் பிரியா மனதுடன் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். இந்நிலையில் மகத்தான செயல்பாடுகளை வெளிப்படுத்தி விடை பெற்றுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 2002இல் அறிமுகமான போது ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்தின் முதன்மை பவுலராக வருவார் என்று நாசர் ஹுசைன் தம்மிடம் சொன்னதாக சச்சின் நினைவு கூர்ந்துள்ளார். அதை தற்போது அவர் நிரூபித்து காட்டியுள்ளதாகவும் சச்சின் பாராட்டியுள்ளார். அதே சமயம் ஆண்டர்சனுக்கு எதிராக தாம் எப்போதும் மகிழ்ச்சியாக விளையாடியதில்லை என்று பாராட்டும் சச்சின் இது பற்றி ட்விட்டரில் பேசியுள்ளது பின்வருமாறு.
“ஹேய் ஜிம்மி. உங்களின் அற்புதமான கேரியருக்கு வாழ்த்துக்கள். 2002இல் முதல் முறையாக நீங்கள் பந்து வீசியதை பார்த்தேன். அப்போது நாசர் ஹுசைன் நீங்கள் இங்கிலாந்தின் வருங்காலமாக திகழ்ந்து முதன்மை பவுலராக வருவீர்கள் என்ற மிகப்பெரிய கருத்தை என்னிடம் சொன்னார். அதை நிரூபித்துள்ள நீங்கள் இங்கிலாந்து ரசிகர்களை ஏமாற்றவில்லை”
“உலகின் மற்ற ரசிகர்களுக்கும் நீங்கள் நிறைய மகிழ்ச்சியை கொடுத்தீர்கள். ஆட்டத்தை பார்த்தது மகிழ்ச்சி. ஆனால் உங்களுக்கு எதிராக விளையாடுவது மகிழ்ச்சி கிடையாது. ஏனெனில் புதிய பந்தில் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் நீங்கள் வித்தியாசமானவர். அதை வைத்து நீங்கள் பேட்ஸ்மேன்களின் வாழ்க்கையை கடினமாக்கினீர்கள். பலருக்கும் ரோல் மாடலாக திகழும் நீங்கள் 188 போட்டிகளில் 704 எடுத்துள்ளது அபாரமானது”
இதையும் படிங்க: இந்தியாவில் வென்றது ஸ்பெஷல்.. 21 வருஷமா இதை செஞ்சது மகிழ்ச்சியான வலி.. ஆண்டர்சன் உருக்கம்
“எளிதாக சொல்ல வேண்டும்மெனில் அற்புதமானது நண்பா. இந்த நேரத்தில் உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். இனிமேல் தான் உங்களுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கும் நல்ல வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கப் போகிறது. இந்த வாய்ப்பில் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்காக வாழ்த்து தெரிவிக்கிறேன். அற்புதமான கேரியருக்காக வெல்டன்” என்று கூறினார்.