இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்கியது. லீட்ஸ் நகரில் இருக்கும் ஹண்டிங்லே மைதானத்தில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து விளையாடும் இந்தியா முதல் நாளில் 359/3 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தைப் பெற்றுள்ளது.
இந்திய அணிக்கு கேஎல் ராகுல் 42 ரன்கள் எடுத்து அசத்தினார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் சதத்தை அடித்து 101 ரன்கள் குவித்தார். கேப்டன் சுப்மன் கில் சதத்தை அடித்து 127*, துணைக் கேப்டன் ரிசப் பண்ட் 65* ரன்கள் குவித்து களத்தில் உள்ளார்கள். அதனால் இந்தப் போட்டியில் வெற்றிக்கு தேவையான வலுவான அடித்தளத்தை இந்தியா அமைத்துள்ளது என்றே சொல்லலாம்.
2002 மாதிரி ஜெய்ப்பாங்க:
இந்நிலையில் 2002ஆம் ஆண்டு இதே லீட்ஸ் மைதானத்தில் தாம், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஜோடியாக சதங்களை அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்ததை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நினைவு கூர்ந்துள்ளார். அதே போல இப்போட்டியில் இன்னும் ஒருவர் சதமடித்தால் இந்தியா வெல்லும் என்று நம்பிக்கைத் தெரிவிக்கும் சச்சின் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ராகுல் – ஜெய்ஸ்வால் ஆகியோர் அமைத்த திடமான அடித்தளம் இந்தியாவுக்கு நல்ல நாளை கொடுத்துள்ளது”
“ஜெய்ஸ்வால், கில் ஆகியோர் சிறப்பான சதம் அடித்ததற்காக வாழ்த்துக்கள். ரிஷப் பண்ட் பங்களிப்பும் நம்முடைய அணிக்கு முக்கியமானது. இந்தியாவின் பேட்டிங் எனக்கு 2002 ஹண்டிங்லே டெஸ்ட் போட்டியை நினைவுபடுத்துகிறது. அந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட், நான் சதங்கள் அடித்தோம். அந்தப் போட்டியில் நாங்கள் வெற்றியும் பெற்றோம்”
சச்சின், கங்குலி கணிப்பு:
“அதே போல இன்று ஜெய்ஸ்வால், கில் ஆகியோர் தங்களுடைய பங்களிப்பைக் கொடுத்துள்ளார்கள். அந்த 3வது சதத்தை அடிக்கப் போவது யார்?” என்று பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த சௌரவ் கங்குலி இம்முறை 4வது சதம் வரும் என்று கணித்துள்ளார். இது பற்றி சச்சினுக்கு ட்விட்டரில் கங்குலி கொடுத்த பதில் பின்வருமாறு.
இதையும் படிங்க: அப்பப்பா என்னா அடி.. இங்கிலாந்து மண்ணில் வெளுத்து வாங்கி இந்தியா சாதனை துவக்கம் – விவரம் இதோ
“ஹாய் சாம்பியன். இம்முறை அது நான்காக இருக்கலாம். இந்த நல்ல ஆடுகளத்தில் ரிஷப் பண்ட், கருண் நாயர் சதம் அடிக்கக்கூடும். 2002இல் முதல் நாளில் இருந்த ஆடுகளம் இப்போது இருப்பதை விட கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது” என்று பதிலளித்துள்ளார். அவர்களுடைய இந்த உரையாடல் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அவர்களுடைய இந்த கணிப்பு உண்மையாகி இந்தியா வெல்கிறதா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.



