இந்தியாவில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடி வரும் மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. அதில் சச்சின் டெண்டுல்கர் தலைமையில் விளையாடும் இந்தியா மாஸ்டர் தங்களுடைய லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் மட்டும் தோற்றது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளை தோற்கடித்த இந்திய அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து அசத்தியது.
அடுத்ததாக பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை 94 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மாஸ்டர்ஸ் தோற்கடித்தது. ராய்ப்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியாவுக்கு கேப்டன் சச்சின் டெண்டுல்கர் 42, யுவராஜ் சிங் 59 ரன்கள் அடித்து 220 ரன்கள் குவிக்க உதவினர். குறிப்பாக யுவராஜ் சிங் 7 சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார்.
ஹோலி கொண்டாட்டம்:
பின்னர் ஆஸ்திரேலியாவை 126க்கு சுருட்டிய இந்தியா தொடரிலிருந்து வெளியேற்றி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. இந்நிலையில் பிப்ரவரி 14ஆம் தேதி இந்தியாவில் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. அந்த விழாவை சச்சின் தலைமையில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி வீரர்கள் கொண்டாடினர்.
அதில் சக வீரர்கள் மீது சச்சின் டெண்டுல்கர் வண்ணங்களை பூசி மகிழ்ந்து கொண்டாடினார். அவர் மீதும் சக வீரர்கள் வண்ணங்களை வீசி ஆரவாரத்துடன் கொண்டாடினர். ஆனால் அந்தக் கொண்டாட்டத்தில் யுவராஜ் சிங் கலந்து கொள்ளாமல் தமது ஹோட்டல் அறையிலேயே தூங்கிக் கொண்டிருந்தார்.
ஜாம்பவான்களின் ஹோலி:
அப்போது ஹோலி குழாயில் வண்ணங்கள் கலந்த நீரை நிரப்பிக் கொண்டு சச்சின் தெரிவித்தது பின்வருமாறு. “தண்ணீரை நிரப்பிய இந்த துப்பாக்கி குழாய் முழுமையாக நிரம்பியுள்ளது. இங்கிருந்து நாம் யுவராஜ் சிங் அறைக்குச் செல்வோம். அங்கே தூங்கிக் கொண்டிருக்கும் அவர் நேற்றிரவு அவர் நிறைய சிக்சர்கள் அடித்தார். இப்போது அங்கே சென்று அவர் மீது நான் தண்ணீரில் சிக்சர்களை அடிக்கிறேன்” என்று சொல்லி சிரித்துக் கொண்டே சென்றார்.
இதையும் படிங்க: 2013-ல் ராகுல் டிராவிட் என்னை இப்படிதான் தேர்வு செய்தார்.. யாரும் அறியா தகவலை பகிர்ந்த – சஞ்சு சாம்சன்
அங்கே யுவ்ராஜ் சிங் கதவையும் சச்சின் தட்டினார். கதவை திறந்ததும் சச்சின் மற்றும் அருகில் இருந்த அனைவரும் சட்டை கூட போடாமல் வெளியே வந்த யுவராஜ் மீது வண்ணங்களையும் தண்ணீரையும் அடித்து ஹோலியைக் கொண்டாடினர். அப்படியே யூசுப் பதான், ராகுல் சர்மா உள்ளிட்ட அனைத்து வீரர்களும் வண்ணங்களின் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். சச்சின் பகிர்ந்துள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் இந்தியா மாஸ்டர்ஸ் தயாராக உள்ளனர்.



