நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்றது. பெங்களூருவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 46க்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனை படைத்தது. அதனால் இரண்டாவது இன்னிங்ஸில் 462 ரன்கள் குவித்து போராடியும் இந்திய அணியால் இன்னிங்ஸ் தோல்வியை மட்டுமே தவிர்க்க முடிந்தது.
மறுபுறம் 402, 110-2 ரன்கள் குவித்த நியூசிலாந்து 36 வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று சாதனை படைத்தது. அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் இந்தியா ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது. எனவே இத்தொடரை வென்று 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற கடைசி 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
சிராஜை கழற்றி விடுங்க:
இந்நிலையில் அப்போட்டியில் கடைசி நாளில் 107 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு எதிராக புதிய பந்தை பயன்படுத்தி பும்ரா 2 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார். ஆனால் எதிர்ப்புறம் முகமது சிராஜ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விக்கெட்டை எடுக்கவில்லை. அதனால் பும்ராவின் போராட்டம் இந்தியாவின் வெற்றிக்கு கைகொடுக்கவில்லை.
இந்நிலையில் அடுத்த போட்டியில் முகமது சிராஜ்க்கு பதிலாக கடந்த இங்கிலாந்து மற்றும் வங்கதேச தொடரில் அசத்திய ஆகாஷ் தீப்பை கொண்டு வருவதைப் பற்றி இந்தியா யோசிக்க வேண்டும் என முன்னாள் வீரர் சபா கரீம் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முகமது சிராஜ் அழுத்தத்தின் கீழ் இருப்பார் என்று கணிக்கிறேன். அதனால் அடுத்த டெஸ்ட் போட்டிக்கு முன் பிளேயிங் லெவன் பற்றி இந்திய அணி விவாதிப்பார்கள் என்று நம்புகிறேன்”
ஆகாஷ் தீப் வேண்டும்:
“ஏனெனில் உங்களுடைய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புதிய பந்தில் விக்கெட்டை எடுத்துக் கொடுத்து 2வது ஸ்பெல்லில் 2வது புதிய பந்தில் நன்றாக வீசுவார் என்று எதிர்பார்ப்பீர்கள். சிராஜ் அதை செய்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆகாஷ் தீப் கடந்த போட்டிகளில் அதை செய்து ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை பெற்றுக் கொடுத்தார்”
இதையும் படிங்க: டாசில் தோற்றது தான் எங்களது வெற்றிக்கு உதவியது.. வெற்றிக்கு பின்னர் கலகலப்பாக பேசிய – டாம் லேதம்
“அத்துடன் இந்திய சூழ்நிலைகளில் ஆகாஷ் தீப் நிறைய பந்து வீசிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். ஏனெனில் பெங்கால் அணிக்காக அவர் பல வருடங்கள் உள்ளூரில் விளையாடியுள்ளார். எனவே அது போன்ற உயிரற்ற பிட்ச்களில் பந்து வீசும் அனுபவம் கொண்டவர் உங்களுக்கு தேவை” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் பும்ராவுக்கு ஆதரவு கொடுக்கும் பவுலர் தேவை என்று ஜாம்பவான் அனில் கும்ப்ளேவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



