பெங்களூருவில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா போராடி வருகிறது. அக்டோபர் 16ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 46 ரன்களுக்கு சுருண்டு சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சாதனை படைத்தது. பின்னர் பேட்டிங் செய்த நியூசிலாந்து 402 ரன்கள் குவித்து அசத்தியது.
அதைத் தொடர்ந்து 356 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடி வரும் இந்தியா 4வது நாள் உணவு இடைவெளியில் 344-3 ரன்கள் குவித்து போராடி வருகிறது. இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 35, கேப்டன் ரோஹித் சர்மா 52, விராட் கோலி 70 ரன்கள் எடுத்து போராடி அவுட்டானார்கள். இருப்பினும் இளம் வீரர் சர்பராஸ் கான் சதமடித்து 125* ரன்கள் குவித்து நியூசிலாந்துக்கு சவாலை கொடுத்து வருகிறார்.
சொன்னதை செய்த சர்பராஸ்:
அவருடன் ரிஷப் பண்ட் முழங்காலில் சந்தித்த காயத்தையும் தாண்டி அரை சதமடித்து 53* ரன்கள் குவித்து இந்தியாவுக்காக போராடி வருகிறார். முன்னதாக இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான சர்பராஸ் கான் 2வது இன்னிங்ஸில் பொறுப்புடன் விளையாடி இந்தியாவுக்காக தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் பெரிய ரன்கள் குவித்து போராடி வந்தார்.
அதன் பயனாக கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமான சர்பராஸ் கான் அடுத்தடுத்த அரை சதங்கள் அடித்து அசத்தினார். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக 6 மாதத்திற்கு முன் தரம்சாலாவில் நடைபெற்ற 5வது டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் 56 ரன்களில் அவுட்டானார். அப்போது அடுத்த முறை சதமடிப்பேன் என்று அவர் சொன்னதை இன்று செய்து காட்டியுள்ளதாக முன்னாள் வீரர் சபா கரீம் பாராட்டியுள்ளார்.
குடும்பத்துக்கும் பாராட்டு:
இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “தரம்சாலாவில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி முடிந்த பின் நான் சர்பராஸ் கானை சந்தித்தேன். அப்போட்டியில் அரை சதமடித்து அவுட்டான அவர் அடுத்த முறை வாய்ப்பு கிடைத்தால் சதமடிப்பேன் என்று என்னிடம் சொன்னார். இது போன்ற தன்னம்பிக்கையை கடந்த சில வருடங்களாக கொண்டுள்ளதே அவருக்கு இன்று உதவியது”
இதையும் படிங்க: ரோஹித் சர்மா மட்டுமின்றி மொத்த இந்திய அணியையும் சிரிக்க வைத்த சர்பராஸ் கான் – போட்டியில் ஏற்பட்ட சுவாரசியம்
“இப்போதுள்ள இளம் தலைமுறையினர் தங்களுடைய திறமையை வலுவாக நம்பி ரன்கள் அடிகின்றனர் அல்லது மேட்ச் வின்னர்களாக வருகின்றனர். அந்த தன்னம்பிக்கையே அவர்கள் விரைவாக வளர உதவுகிறது. அதை இன்று சர்பராஸ் ஆட்டத்தில் நாம் பார்த்தோம். இதற்கான பாராட்டுகளை அவருடைய குடும்பத்திற்கும் கொடுக்க வேண்டும். அவர்கள் சர்பராஸ் முன்னேறுவதற்காக நிறைய நேரங்களை செலவிட்டுள்ளனர்” என்று கூறினார்.



