லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது விக்கெட் கீப்பிங் செய்கையில் ரிஷப் பண்ட் விரல் பகுதியில் காயமடைந்தார். இதன் காரணமாக முதல் இன்னிங்சில் 34 ஓவர்கள் மட்டுமே விக்கெட் கீப்பிங் செய்த அவர் பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு மாற்று விக்கெட் கீப்பராக களத்திற்கு வந்த துருவ் ஜுரேலே பெரும்பாலும் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார்.
ரிஷப் பண்டின் காயம் குறித்த தகவலை வெளியிட்ட : துணை பயிற்சியாளர்
இருந்தாலும் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது வலியுடன் பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் 74 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 9 ரன்களையும் குவித்திருந்தார். ரிஷப் பண்ட்டால் வலியுடன் பேட்டிங் செய்ய முடிந்தாலும் தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்ய முடியாமல் போனது.
இதன் காரணமாக அடுத்த நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அவர் இடம் பெறுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு பதிலளித்துள்ள இந்திய அணியின் துணைப் பயிற்சியாளரான ரயான் டென் டெஸ்கோத்தே கூறுகையில் : மான்செஸ்டர் போட்டிக்கு முன்னதாக ரிஷப் பண்ட் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவார்.
அவரை வெளியேற்றிவிட்டு ஒரு டெஸ்ட் போட்டியில் நாங்கள் விளையாட வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனாலும் அவர் லார்ட்ஸ் போட்டியின் போது கடுமையான வலியுடனே பேட்டிங் செய்தார். தற்போது அவரது காயம் படிப்படியாக குணமடைந்து வந்தாலும் மான்செஸ்டர் போட்டிக்கு முன்னதாக அவரால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியுமா? என்பதை நாங்கள் பரிசோதிப்போம்.
அதுவே அவரது கடைசி சோதனையாக இருக்கும். ஒருவேளை அவரால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாத பட்சத்தில் போட்டியின் பாதியில் மாற்று வீரரை கொண்டுவர நாங்கள் விரும்பவில்லை என துணைப் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யும் அளவிற்கு தகுதியுடன் இருந்தால் மட்டுமே விளையாட வைக்கப்படலாம் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : இந்திய அணிக்கு எதிரான அடுத்த 2 போட்டியிலும் நான் ஆடுவேன்.. அதுக்கு காரணமே இதுதான் – ஜோப்ரா ஆர்ச்சர் பேட்டி
ஏனெனில் போட்டியின் பாதியில் விக்கெட் கீப்பரை மாற்றுவதற்கு பதிலாக முழுமையாக ரிஷப் பண்ட்டுக்கு காயம் குணமடையவில்லை என்றால் நான்காவது போட்டியில் அவருக்கு ஓய்வினை வழங்கிவிட்டு அவருக்கு பதிலாக துருவ் ஜுரேலை விளையாட வைக்கலாம் என்று அவரது இந்த பேட்டியின் மூலம் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



