
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் ஹாட்ரிக் வெற்றிகளைப் பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. அடுத்து நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் பாகிஸ்தானை மீண்டும் தோற்கடித்தது. அடுத்ததாக இந்தியா செப்டம்பர் 23ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிராக களமிறங்க உள்ளது.
அந்தப் போட்டியில் ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்குமா என்று ஒரு தரப்பினர் எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுப்மன் கில் ஓப்பனிங்கில் களமிறங்கி ஓரளவு நன்றாக விளையாடி வருகிறார். அதனால் மிடில் ஆடரில் விளையாடிய சஞ்சு சாம்சன் ஓமனுக்கு எதிராக மெதுவான அரை சதத்தை அடித்தார்.
இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் 13 (17) ரன்னில் அவுட்டான அவர் ஏமாற்றத்தையே கொடுத்தார். அதனால் அவருக்கு பதில் வங்கதேசம் போன்ற கத்துக்குட்டிக்கு எதிராக ஜிதேஷ் சர்மா அல்லது ரிங்கு சிங் போன்றவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் ஆசியக் கோப்பையில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று துணைப் பயிற்சியாளர் ரியான் டஸ்சேட் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் தொடர்ந்து அசத்துவார் என்று இந்திய அணி நம்புவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் அந்தப் பையன்களை நாங்கள் களத்தில் விளையாட வைக்க முயற்சித்தோம். ஆனால் ஆசியக் கோப்பை போன்ற முக்கியமான தொடரில் நீங்கள் வெற்றிக்காக விஷயங்களை கையாள வேண்டும்”
“அதனால் தற்போதைய சூழ்நிலையில் ரிங்கு அல்லது ஜிதேஷ் ஆகியோருக்கு போட்டி நேரம் வழங்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்கள் நன்றாக பயிற்சி எடுத்து வருகிறார்கள். எனவே இருதரப்பு தொடர்களில் அவர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான நிதர்சனமான வாய்ப்புகளை நாங்கள் கொடுக்கப் பார்ப்போம். ஏனெனில் சூப்பர் 4 சுற்றில் நீங்கள் 2 வெற்றிகளைப் பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியுமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது”
இதையும் படிங்க: நம்பர் ஒன் முக்கியமல்ல.. 3.5 மணி நேரத்தில் இந்தியாவை எங்க வலையில் வீழ்த்துவோம்.. வங்கதேச கோச் பேட்டி
“அதனால் பெடலில் இருந்து காலை எடுப்பதற்காக நாங்கள் தயங்குகிறோம். சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் எங்களுக்குத் தேவையான வேலையை செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் அங்கே எப்படி அசத்த வேண்டும் என்பதற்கான வழியைக் கண்டறிவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறினார்.