அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் ஆறாம் தேதி துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா வென்று முன்னிலை வகிக்கிறது. இந்த சூழ்நிலையில் பகல் இரவாக துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் மட்டுமே குவித்தது.
அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 42, கேஎல் ராகுல் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அதை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 82-1 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அஸ்வின் தேர்வு:
அது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் சுந்தரை வைத்து இந்தியா வென்றது. அந்த காரணத்தால் இந்தப் போட்டியிலும் சுந்தர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அடிலெய்ட் பிட்ச்சில் சுந்தரை விட அஸ்வின் பொருத்தமாக இருப்பார் என்பதாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டஸ்சேட் தெரிவித்துள்ளார்.
மேலும் 7வது இடத்தில் நித்திஸ் ரெட்டி பேட்டிங் செய்வதற்கு இருப்பதால் அஸ்வினை பயமின்றி தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து தொடரின் பாதியில் வந்து தவறான காலை வைக்காமல் அசத்தினார். கடந்தப் போட்டியில் நாங்கள் பேட்டிங்கை கொஞ்சம் வலுவாக்க விரும்பியதால் சுந்தரை தேர்ந்தெடுத்தோம்”
சுந்தர் – அஸ்வின்:
“ஆனால் கடந்த போட்டியில் நித்திஸ் ரெட்டி பேட்டிங் எப்படி செய்கிறார் என்பதை நாங்கள் பார்த்தோம். அதனால் இந்த போட்டியில் உள்ள சூழ்நிலைகளில் தற்சமயத்தில் யார் சுழல் பந்து வீச்சில் அசத்தக்கூடியவர் என்பதையும் பார்த்தோம். அது போன்ற சூழ்நிலையில் அஸ்வின் இங்குள்ள சூழ்நிலையில் அதிக விக்கெட்களை எடுப்பார் என்று நாங்கள் கருதுகிறோம்”
இதையும் படிங்க: உண்மையிலேயே அப்படி நடக்கும்னு நினைக்கல.. ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை வீழ்த்திய குறித்து பேசிய – மிட்சல் ஸ்டார்க்
“நித்திஷ் ரெட்டி உங்களுக்கு ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்யும் போது 8வது இடத்தில் அஸ்வின் அசத்துகிறாரா என்ற கவலை இல்லாமல் தன்னம்பிக்கையுடன் இருக்க முடியும். இந்த பிட்ச்சில் அஸ்வின் கொஞ்சம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கருதுகிறோம். மற்றபடி அவர்களுக்கிடையே பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை” என்று கூறினார். 2021 அடிலெய்ட் போட்டியில் அஸ்வின் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய அனுபவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.



