
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக காயத்தை சந்தித்தார். இதன் காரணமாக இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியாது என சி.எஸ்.கே அணியின் நிர்வாகமும் அறிவித்திருந்தது. அந்தவகையில் சென்னை அணி விளையாடிய முதல் சில போட்டிகளை அவர் தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.
ஏனெனில் தற்போது 44 வயதாகும் தோனி இந்த ஆண்டுடன் நிச்சயம் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்பதனால் அவர் ஒரு சில போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை காண சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள் அனைவரும் மைதானத்திற்கு தொடர்ந்து வந்தபடி இருக்கின்றனர். ஆனாலும் தொடர்ந்து தோனி விளையாடாமல் இருந்து வருகிறார்.
இதுவரை ஏற்கனவே 9 போட்டிகள் முடிவடைந்த வேளையில் சிஎஸ்கே அணி தங்களது பத்தாவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த பத்தாவது லீக் போட்டியிலும் அவர் விளையாடாதது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதோடு தோனி மைதானத்திற்கும் வராமல் ஹோட்டல் அறையிலேயே தங்கி இருக்கிறார்.
இந்நிலையில் தோனி எப்போது மீண்டும் அணிக்குள் வருவார்? என்பது குறித்து டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : தோனி தனது பிட்னஸ்ஸை மெல்ல மெல்ல மீட்டெடுத்து விட்டார். நிச்சயம் அவர் மீண்டும் வருவார் என்பது தான் எங்களுடைய நம்பிக்கையாகவும் இருக்கிறது.
இதையும் படிங்க : என்னங்க முடிவு இது? ஜேமி ஓவர்டனை வீணடித்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் – நடந்தது என்ன?
அவர் விளையாடுவதற்கு தயார் என்று உணர்ந்து விட்டால் நிச்சயம் வருவார். அந்த போட்டி மிக நெருக்கமாக உள்ளது என்று ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நிச்சயம் அடுத்த போட்டியில் தோனி பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதோடு தற்போதைய நிலையில் அவர் போட்டிகளின் போது மைதானத்திற்கு வரவில்லை என்றாலும் ஹோட்டல் அறையிலிருந்து சிஎஸ்கே அணி விளையாடும் விதத்தைப் பார்த்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.