பிட்ச்ல பிரச்சனை இல்ல.. 6 ஓவரில் செஞ்ச அந்த 4 தப்பு தான் தோல்விக்கு காரணம்.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் வருத்தம்

Ruturaj gaikwad 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெற்ற 18வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் தோற்கடித்தது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை திணறலாக விளையாடி 20 ஓவரில் 165/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரகானே 35, ஜடேஜா 31*, கேப்டன் ருதுராஜ் 26 ரன்களை மிகவும் மெதுவாக எடுத்தனர்.

சிவம் துபே மட்டுமே அதிகபட்சமாக அதிரடியாக 45 (24) ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக சபாஷ் அகமது, கேப்டன் கம்மின்ஸ், நடராஜன், உனட்கட், புவனேஸ்வர் குமார், தலா 1 விக்கெட் எடுத்தனர். பின்னர் 166 ரன்களை துரத்திய ஹைதராபாத்துக்கு அபிஷேக் ஷர்மா 37, டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம் 50 ரன்கள் எடுத்து 18.1 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

சென்னையின் தவறு:
குறிப்பாக முகேஷ் சௌவுத்ரி வீசிய ஒரே ஓவரில் அபிஷேக் சர்மா 26 ரன்கள் அடித்து நொறுக்கியதால் முதல் 6 ஓவர்கள் முடிவில் 78 ரன்கள் குவித்த ஹைதராபாத் ஆரம்பத்திலேயே வெற்றியை தனதாக்கியது. அதனால் மொயின் அலி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் சென்னை இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது.

இந்நிலையில் இப்போட்டியில் எக்ஸ்ட்ரா 15 – 20 ரன்கள் எடுக்க தவறியது, பவர்பிளே ஓவரில் 78 ரன்கள் கொடுத்தது, அபிஷேக் சர்மாவுக்கு எதிராக 26 ரன்கள் கொடுத்தது, டிராவிஸ் ஹெட் 0 ரன்னில் கொடுத்த கேட்ச் கோட்டை விட்டது தோல்விக்கு காரணமாக அமைந்ததாக சென்னை கேப்டன் ருதுராஜ் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையாக பிட்ச் மெதுவாக இருந்தது. அவர்கள் கடைசி நேரத்தில் சிறப்பாக பந்து வீசி கட்டுக்குள் வைத்திருந்தனர்”

- Advertisement -

“எங்களை அதிரடியாக விளையாடவில்லை. ஆரம்பத்தில் நன்றாக விளையாடினோம் என்று நினைக்கிறேன். ஆனால் அவர்கள் மீண்டும் கம்பேக் கொடுத்தனர். பிட்ச் கருமண்ணால் உருவாக்கப்பட்டிருந்ததால் நாங்கள் அது மெதுவாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் நேரம் செல்ல செல்ல அது நாங்கள் எதிர்பார்த்ததை விட மெதுவாக இருந்தது. ஹைதராபாத் பவுண்டரி எல்லைகளை சரியாக பயன்படுத்திக் கொண்டனர்”

இதையும் படிங்க: யுவராஜ், லாராவுக்கு நன்றி.. ஒரே ஓவரில் 26 ரன்ஸ்.. சிஎஸ்கே’வை தெறிக்கவிட்ட ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா பேட்டி

“ஆனால் பவர் பிளே ஓவர்களில் நாங்கள் அதிகமான ரன்கள் கொடுத்தோம். ஒரு கேட்ச்சை தவற விட்டோம். ஒரு ஓவரில் ரன்களை வாரி வழங்கினோம். இருப்பினும் போட்டியை நாங்கள் 19வது ஓவர் வரை எடுத்துச் சென்றது நல்ல முயற்சி. அதனால் 170 – 175 ரன்கள் அடித்திருந்தால் எங்களுக்கு நன்றாக அமைந்திருக்கலாம். கடைசி நேரத்தில் கொஞ்சம் பனி இருந்தது. ஆனால் மொய்ன் அலி 15 – 16வது ஓவரிலும் நன்றாக பந்து வீசினார். எனவே பிட்ச் அதிகமாக மாறியது என்று நான் கருதவில்லை” எனக் கூறினார்.

Advertisement