இந்தியாவில் 2025 விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அந்தத் தொடரில் டிசம்பர் 31ஆம் தேதி ஜெய்ப்பூரில் எலைட் குரூப் சி பிரிவில் இடம் வகிக்கும் உத்தரகாண்ட் மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற உத்தரகாண்ட் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து பேட்டிகில் துவங்கிய மகாராஷ்டிரா அணிக்கு துவக்க வீரர்கள் அர்சின் குல்கரனி 13, சிதேஷ் வீர் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள் போதாகுறைக்கு அன்கிட் பாவ்னே 12 ரன்னில் அவுட்டானதால் 50/3 என மகாராஷ்டிரா ஆரம்பத்திலேயே தடுமாறியது. அதனால் 4வது இடத்தில் களமிறங்கியிருந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்புடன் நிதானமாக விளையாடினார்.
பொறுப்பான ருதுராஜ்:
அவருடன் கை கொடுக்கும் முயற்சித்த ராகுல் திரிபாதி 4வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 33 ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். மறுபுறம் தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய ருதுராஜ் 66 பந்துகளில் அரை சதமடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த சத்தியஜித் பச்சாவ் 5வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதமடித்து அதிரடியாக 56 (45) ரன்கள் குவித்து அவுட்டானார்.
அவருக்கு பின் அதிரடியை துவக்கிய ருதுராஜ் அடுத்த 38 பந்துகளில் 50 ரன்களை குவித்து சிறப்பான சதத்தை அடித்தார். லோயர் ஆர்டரில் வந்த ராமகிருஷ்ணா கோஸ் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி 47 (31) ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் 12 பவுண்டரி 3 சிக்சரைப் பறக்க விட்ட ருதுராஜ் கெய்க்வாட் 124 (113) ரன்களை குவித்து அவுட்டானார். அவருடன் நிகில் நாய்க் 11* (7) ரன்களை எடுத்த உதவியுடன் 50 ஓவரில் மகாராஷ்டிரா 331/7 ரன்கள் குவித்தது.
தேர்வுக்குழுவுக்கு மெசேஜ்:
அந்த வகையில் இப்போட்டியில் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ருதுராஜ் தம்முடைய அணியை தூக்கி நிறுத்தி நல்ல ஸ்கோர் குவிக்க உதவினார். இப்படி உள்ளூரில் தொடர்ந்து போராடி வரும் அவர் நீண்டகாலம் கழித்து கடந்த தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் தேர்வானார். அந்தத் தொடரில் 2வது போட்டியில் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக முதல் முறையாக சதமடித்து அசத்தினார்.
இதையும் படிங்க: 14 சிக்ஸ் 157 ரன்ஸ்.. தம்பி முஷீருடன் சேர்ந்து வெளுத்த சர்பராஸ்.. அகர்கருக்கு மெசேஜ்.. சிஎஸ்கே ஹேப்பி
அடுத்ததாக 2026 புத்தாண்டில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடரிலும் இந்தியாவுக்காக விளையாட தயாராக இருக்கிறேன் என்பதை ருதுராஜ் இப்போட்டியில் சதமடித்து காண்பித்துள்ளார் என்றே சொல்லலாம். அதே போல அவருடைய தொடர்ச்சியான நல்ல ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



