ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு போட்டிகளையும் இந்தியா முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது.
முன்னதாக அந்த தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி 2 பயிற்சி போட்டிகளில் விளையாட உள்ளது. மறுபுறம் ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த பயிற்சி போட்டியிலும் விளையாடவில்லை. எனவே அந்தப் பயிற்சிக்கு போதுமானதாக இருக்காது என்று பிசிசிஐ கருதுகிறது.
அரிதான போட்டி:
அதனால் இந்தியா ஏ அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் ஒரு போட்டிக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்ய உள்ளதாக க்ரிக்பஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் போட்டி பெர்த் நகரில் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. அதற்கு முன்பாக இந்தப் போட்டி நவம்பர் 15 – 17 ஆகிய தேதிகளில் பெர்த் நகரில் இருக்கும் புகழ்பெற்ற வாகா மைதானத்தில் நடைபெற உள்ளது.
அந்தப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் பங்கேற்க உள்ளனர். அதற்கு எதிராக விளையாடும் இந்தியா ஏ அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிய வருகிறது. ஏனெனில் கடந்த 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவருடைய தலைமையிலான இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.
கேப்டன் ருதுராஜ்:
மேலும் ஐபிஎல் தொடரில் தோனியின் நம்பிக்கையை பெற்ற ருதுராஜ் சிஎஸ்கே கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இது போக சமீபத்தில் துலீப், இராணிக் கோப்பையில் ருதுராஜ் கேப்டனாக செயல்பட்டார். அதனால் அவர் இந்தியா ஏ அணிக்கு கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. மொத்தத்தில் அந்தப் போட்டி நடைபெற உள்ளது பற்றி ஆஸ்திரேலிய நிர்வாகி பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க.. ஜெயவர்தனே வைத்து மும்பை போட்டுள்ள பிளான்.. வெளியான அறிவிப்பு
“அது இந்திய அணிகளுக்கு இடையேயான போட்டி. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது இந்தியாவைப் பொறுத்தது. சில டெஸ்ட் வீரர்களும் இந்தியா ஏ வீரர்களும் அதில் விளையாடக் கூடும். ஆனால் அது பிசிசிஐ பொறுத்தது. இப்போதெல்லாம் பல நாடுகள் பயிற்சி போட்டிகளில் விளையாட விரும்புவதில்லை. இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு முன் ஆஸ்திரேலியாவும் பயிற்சி போட்டியில் விளையாடப் போவதில்லை” என்று கூறினார்.



