
அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது முடிவடைந்த பின்னர் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா போன்ற வீரர்கள் ஓய்வினை அறிவித்து விட்டனர். இதன் காரணமாக தற்போது முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்ட புதிய இந்திய அணியானது ஜிம்பாப்வே தொடருக்காக சென்றுள்ளது.
அந்த வகையில் ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்த வேளையில் இன்று இரண்டாவது டி20 போட்டியானது நடைபெற இருக்கிறது.
இந்த தொடரின் கேப்டனாக சுப்மன் கில் செயல்பட்டு வருகிறார். ஆனால் அவரது தலைமையில் முதல் போட்டியிலேயே இந்திய அணி எளிய இலக்கை கூட துரத்த முடியாமல் தோல்வியை சந்தித்து இருப்பது அவரது கேப்டன்சியின் மீது பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.
அதோடு பிசிசிஐ தவறான கேப்டனை தேர்வு செய்து விட்டார்கள் என்றும் இப்படி இளம் வீரர்களை கொண்ட இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் தான் சரியான கேப்டனாக இருந்திருப்பார் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஏனெனில் சுப்மன் கில் பெரிய அளவில் கேப்டன்சி அனுபவம் இல்லாதவர்.
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அவர் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டாலும் அந்த அணி சற்று மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் அதே வேளையில் ருதுராஜ்-க்கு ஏகப்பட்ட கேப்டன்சி அனுபவம் உள்ளது. சி.எஸ்.கே அணியின் கேப்டனாக அவர் இருப்பது மட்டுமின்றி மும்பை மாநில அணிக்காகவும் சையத் முஸ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பை போன்ற தொடர்களில் அவர் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க : 10 ஆண்டுகளாக இந்திய அணியில் நீடித்து வந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ
அதுமட்டுமின்றி மகாராஷ்டிரா பிரீமியர் லீக்கிலும் அவர் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் உடையவர் என்பதனால் அவர் தான் இந்த அணிக்கு சரியான கேப்டன் தேர்வாக இருந்து இருப்பார் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதோடு தோனியே அவரிடம் இருக்கும் கேப்டன்சி திறமையை பார்த்துதான் அவரை சி.எஸ்.கே அணியின் கேப்டனாக மாற்றினார் என்பதால் தோனியின் அந்த முடிவு சரியாக இருந்திருக்கும் என்றும் நிச்சயம் இனி வரும் காலங்களில் இளம் இந்திய அணிக்கு அவரே கேப்டனாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.