
இந்தியாவில் 2025/26 விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் ஒருநாள் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அந்தத் தொடரில் ஜனவரி 8ஆம் தேதி ஜெய்ப்பூரில் எலைட் குரூப் பிரிவில் இடம் வகிக்கும் கோவா – மகாராஷ்டிரா அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா முதலில் பேட்டிங் செய்து போராடி 50 ஓவரில் 249/7 ரன்கள் குவித்தது.
பிரித்வி ஷா 1, அர்சின் குல்கர்னி 0, அன்கீத் பாவ்னே 0, சித்தார்த் மாத்ரே 3, சௌரப் நாவலே 5 ரன்களில் அவுட்டானதால் 25/5 என மகாராஷ்டிரா ஆரம்பத்திலேயே திண்டாடியது. அப்போது பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் அற்புதமான சதமடித்து 134* (131) ரன்கள் குவித்தார். அவருக்கு விக்கி ஓஸ்த்வால் 53, ராஜ்வரதன் ஹங்கர்கேகர் 32* (19) ரன்கள் குவித்து கை கொடுத்தார்கள்.
கோவா அணிக்கு அதிகபட்சமாக வாசுகி கௌஷிக் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதையும் சேர்த்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ருதுராஜ் கெய்க்வாட் 95 இன்னிங்ஸில் 20 சதங்கள் அடித்துள்ளார். அதாவது இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு சதமடித்துள்ள அவர் விஜய் ஹசாரே கோப்பையில் மகாராஷ்டிரா அணிக்காக 15 சதங்கள் அடித்துள்ளார். அது போக இந்தியா ஏ மற்றும் பி அணிகளுக்காக அவர் மொத்தம் 4 (3, 1) சதங்கள் அடித்துள்ளார்.
இதன் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் வேகமாக 20 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ருதுராஜ் படைத்துள்ளார். அந்தப் பட்டியல் (இன்னிங்ஸ்):
1. ருதுராஜ் கெய்க்வாட் (இந்தியா): 95*
2. குர்ராம் மன்சூர் (பாகிஸ்தான்): 129
2. மயங் அகர்வால் (இந்தியா): 129
3. பாபர் அசாம் (பாகிஸ்தான்): 131
4. விராட் கோலி (இந்தியா): 143
5. சல்மான் பட் (பாகிஸ்தான்): 149
அது போக இதுவரை லிஸ்ட் ஏ ருதுராஜ் கிரிக்கெட்டில் 95 இன்னிங்ஸில் 5060* ரன்களை 58.82 சராசரியில் குவித்துள்ளார். இதன் வாயிலாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்தது 50 இன்னிங்ஸில் விளையாடிய வீரர்களில் அதிக பேட்டிங் சராசரி கொண்ட வீரர் என்ற சாதனையையும் ருதுராஜ் தன்வசமாக்கியுள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலியா ஜாம்பவான் மைக்கேல் பெவன் 57.86 என்ற சராசரியை கொண்டிருப்பதே முந்தைய சாதனை.
இதையும் படிங்க: 2023இல் நினைக்காத ஓய்வை 2025இல் அறிவித்த விராட், ரோஹித் 2027 உ.கோ சந்தேகம் தான்.. ஆகாஷ் சோப்ரா
அடுத்து விளையாடிய கோவா அணியை 50 ஓவரில் 244/9 ரன்களுக்கு சுருட்டிய மகாராஷ்டிரா வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக லலித் யாதவ் 57*, காஸ்யப் பாகாலே 42, ஸ்னேஹல் 40, கேப்டன் தீப்ராஜ் கோயன்கர் 34 ரன்கள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. மகாராஷ்டிரா அணிக்கு அதிகபட்சமாக பிரசாந்த் சோலங்கி 4 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ருதுராஜ் ஆட்டநாயகன் விருது வென்றார்.