இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பும் இந்தியா அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடர் வரும் நவம்பர் 14, 22 ஆகிய தேதிகளில் கொல்கத்தா மற்றும் கௌகாத்தியில் நடைபெற உள்ளது.
2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தெம்பா பவுமா தலைமையில் வென்ற தென்னாப்பிரிக்கா தற்சமயத்தில் உலகச் சாம்பியனாக திகழ்கிறது. எனவே அத்தொடரில் சொந்த மண்ணில் விளையாடும் இந்திய அணிக்கு தென்னாபிரிக்கா பெரிய சவாலைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் அத்தொடரில் விளையாடும் தங்களுடைய அணியை தென்னாப்பிரிக்க வாரியம் அறிவித்துள்ளது.
கேப்டன் பவுமா:
அதில் காயத்தால் கடந்த பாகிஸ்தான் தொடரில் விளையாடாத கேப்டன் தெம்பா பவுமா அணிக்கு திரும்பியுள்ளார். இந்தியாவில் இருக்கும் மைதானங்களில் ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். எனவே அதை வைத்து இந்தியாவை சாய்ப்பதற்காக கேசவ் மகாராஜ், சேனுரான் முத்துசாமி, ஹார்மர் ஆகிய 3 முதன்மை ஸ்பின்னர்களை தென்னாபிரிக்கா தேர்ந்தெடுத்துள்ளது.
அவர்களுடன் ரபாடா, கோர்பின் போஸ், மார்க்கோ ஜான்சன் ஆகியோர் வேகப்பந்து வீச்சு துறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் மூவருமே லோயர் ஆர்டரில் கணிசமான ரன்களை அதிரடியாக எடுத்து இந்தியாவுக்கு தொல்லை தரும் திறமையைக் கொண்டுள்ளனர் என்றே சொல்லலாம். மிடில் ஆர்டரில் குட்டி ஏபிடி என்று பாராட்டப்படும் தேவால்ட் பிரேவிஸ் மற்றும் வெர்ரைன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணி:
பேட்டிங் துறையில் உலகத்தரம் வாய்ந்த ஐடன் மார்க்ரம் ஓப்பனிங்கில் இந்தியாவுக்கு சவாலைக் கொடுப்பார் என்று நம்பலாம். அவருடன் ரியன் ரிக்கல்டன், ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ், டீ ஜோர்சி போன்ற நல்ல பேட்ஸ்மேன்களும் தென்னாபிரிக்காவுக்கு வலு சேர்க்கிறார்கள். 2025 இந்தியா டெஸ்ட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட தென்னாபிரிக்க அணி விபரங்கள்:
இதையும் படிங்க: டி20 தொடரை கைப்பற்றப்போவது யார்? இந்தியா ஆஸ்திரேலியா தொடர் குறித்து – ஜாஹீர் கான் கணிப்பு
தெம்பா பவுமா (கேப்டன்), கோர்பின் போஸ்க், தேவால்ட் பிரேவிஸ், டோனி டீ ஜோர்சி, ஸுபயர் ஹம்சா, சைமன் ஹார்மர், மாரக்கோ யான்சன், கேஷவ் மகாராஜ், ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், சேனுரான் முத்துசாமி, ககிசோ ரபாடா, ரியன் ரிக்கெல்டன், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், கெயில் வெர்ரையன்



