ஐசிசி 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த தென்னாப்பிரிக்கா கோப்பையை வென்று சாதனை படைத்தது. அடுத்ததாக ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அங்கு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி ஜிம்பாப்வே நாட்டில் உள்ள புலவாயோ நகரில் இருக்கும் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது.
இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய கேசவ் மகாராஜா தலைமையிலான இளம் தென்னாப்பிரிக்கா அணிக்கு டீ ஜோர்சி டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். மேத்தியூ பிரேட்ஸ்கே 13, வியன் முல்தர் 17, டேவிட் பேடிங்கம் 0 என மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
ப்ரேவிஸ் – பிரிட்டோரிஸ் அபாரம்:
அதனால் 55/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய தென்னாப்பிரிக்காவுக்கு மிடில் ஆடரில் அறிமுக வீரர்கள் தேவால்ட் ப்ரேவிஸ் – ல்ஹுன் டிரே பிரிட்டோரிஸ் ஜோடி சேர்ந்தார்கள். அதில் பிரிட்டோரிஸ் நிதானமாக விளையாடிய நிலையில் மறுபுறம் ப்ரேவிஸ் அதிரடியாக விளையாடினார். 2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அறிமுகமான அவர் சரவெடியாக விளையாடி நம்பிக்கை நட்சத்திரமாக அவதரித்தார்.
அதன் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடும் வாய்ப்பையும் பெற்ற அவர் 34 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது 6, 0, 6, 6 என அடுத்தடுத்த சிக்ஸர்களை அடித்த அவர் அரை சதத்தை அடித்து 51 (41) ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்ததாக வந்த கெய்ல் வேரின் 10 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் சீராக விளையாடிய பிரிட்டோரிஸ் அரை சதத்தை அடித்தார்.
2 வரலாற்று சாதனை:
தொடர்ந்து நேர்த்தியாக விளையாடிய அவர் 112 பந்துகளில் சதத்தை அடித்தார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதில் (19 வருடம் 93 நாட்கள்) சதத்தை அடித்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையை பிரிட்டோரிஸ் படைத்தார். இதற்கு முன் கிரேம் பொல்லாக் 19 வருடம் 317 நாட்களில் சதத்தை அடித்ததே முந்தைய சாதனை. மேலும் அறிமுகப் போட்டியிலேயே வேகமாக சதத்தை அடித்த தென்னாப்பிரிக்க வீரர் என்ற வரலாற்றையும் அவர் படைத்தார்.
இதற்கு முன் 2014இல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஸ்டியன் வேன் ஜீல் 129 பந்துகளில் தனது அறிமுகப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்காக சதத்தை அடித்ததே முந்தைய சாதனை. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பிரிட்டோரிஸ் 153 ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்ததாக கேசவ் மகாராஜ் 21 ரன்னில் அவுட்டானாலும் கோர்பின் போஸ் அபாரமாக விளையாடி அரை சதத்தை அடித்தார்.
இதையும் படிங்க: 112 ரன்ஸ்.. இங்கிலாந்தை வெளுத்த மந்தனா.. ஆல் ஃபார்மட் அரசியாக 3 சரித்திர சாதனை.. இந்தியா அசத்தல்
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவரும் ஜிம்பாப்வே பவுலர்களை அபாரமாக எதிர்கொண்டு சதத்தை அடித்தார். அதனால் முதல் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா 418/9 ரன்கள் எடுத்து வலுவான துவக்கத்தைப் பெற்றுள்ளது. அவருடன் களத்தில் மாபாக 9* ரன்களுடன் உள்ளார்.



