ஐசிசி 2024 உலகக் கோப்பை தொடரில் ஜூன் மூன்றாம் தேதி நியூயார்க் நகரில் நான்காவது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் டி பிரிவில் இடம் பிடித்துள்ள இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.
ஆனால் அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி சவாலான பிட்ச்சில் தென்னாப்பிரிக்காவின் தரமான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் 19.1 ஓவரில் 77 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டிலும் டி20 உலகக் கோப்பையிலும் தங்களுடைய குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த இலங்கை மோசமான 2 சாதனை படைத்தது.
ரசிகர்கள் கவலை:
அந்த அணிக்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் யாருமே 20 ரன்கள் கூட தாண்டாத நிலையில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 19 (30) ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 78 என்ற சுலபமான இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ரீசா ஹென்றிக்ஸ் 4 (2) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து வந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் நிதானமாக விளையாட முயற்சித்து 12 (14) ரன்களில் ஆட்டமிழந்தார். அதே போல எதிர்ப்புறம் வழக்கத்திற்கு மாறாக மெதுவாக விளையாடிய குவிண்டன் டீ காக் 20 (27) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த ட்ரிஷன் ஸ்டப்ஸ் 13 (28) ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினார். இருப்பினும் இலக்கு குறைவாக இருந்ததால் கடைசியில் ஹென்றிச் க்ளாஸென் 19* (22) டேவிட் மில்லர் 6* (6) ரன்கள் அடித்து 16.2 ஓவரிலேயே தென்னாபிரிக்காவை 6 வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.
அதனால் இலங்கை சார்பில் அதிகபட்சமாக கேப்டன் வணிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அந்த வகையில் அடித்து நொறுக்கக்கூடிய பேட்ஸ்மேன்களைக் கொண்ட தென்னாப்பிரிக்க அணி கூட இந்த மைதானத்தில் வெறும் 78 ரன்களை துரத்துவதற்கு 16.2 ஓவர்கள் எடுத்துக்கொண்டனர். அந்தளவுக்கு இப்போட்டியின் பிட்ச் பேட்டிங்க்கு மிகவும் சவாலாக இருந்தது என்றே சொல்லலாம். சொல்லப்போனால் 4.42 என்ற இப்போட்டியின் ரன்ரேட் 18 வருட டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகவும் குறைந்தபட்ச ரன் ரேட்டாகும்.
இதையும் படிங்க: இந்திய அணியின் அடுத்த கேப்டன் ரெடி.. ஒதுக்கப்பட்ட பாண்டியா – துண்டு போட்ட இளம்வீரர்
இதே மைதானத்தில் ஜூன் ஐந்தாம் தேதி அயர்லாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அதை விட ஜூன் ஒன்பதாம் தேதி பரம எதிரி பாகிஸ்தானையும் இதே மைதானத்தில் தான் இந்தியா எதிர்கொள்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நியூயார்க் மைதானத்தின் பிட்ச் இப்படி அதிகமாக பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பது இந்திய ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அயர்லாந்து, பாகிஸ்தானை விட தரத்தில் உயர்ந்து நின்றாலும் சில நேரங்களில் டாஸ் எதிராக அமைந்து பிட்ச் அதிகமாக சுழன்றால் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்படலாம்.