பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அங்கு முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 1 (2) என்ற கணக்கில் சமன் செய்தது. அடுத்ததாக நடைபெறும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி அக்டோபர் 28ஆம் தேதி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 20 ஓவரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 194/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிசா ஹென்றிக்ஸ் 60 (40), டோனி டீ ஜோர்ஸி 33 (16), ஜார்ஜ் லிண்டே 36 (22) ரன்கள் எடுத்து அசத்தினார்கள். பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக முகமது நவாஸ் 3, சாய்ம் ஆயுப் 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.
பாபரின் சொதப்பல் கம்பேக்:
அடுத்து விளையாடிய பாகிஸ்தானுக்கு பர்கான் 24 (19) ரன்களில் பெவிலியன் திரும்பினார். அப்போது பாகிஸ்தான் ரசிகர்களின் கரகோஷத்துக்கு மத்தியில் பாபர் அசாம் களமிறங்கினார். சமீப காலங்களில் சுமாராக விளையாடி தோல்விக்கு காரணமான அவரை பாகிஸ்தான் வாரியம் 2025 ஆசியக் கோப்பையிலிருந்து கழற்றி விட்டது. ஆனால் அவரை கழற்றி விட்டும் இந்தியாவிடம் 3 முறை பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது.
எனவே அதற்கு பாபர் அசாமே பரவாயில்லை போல என்று கருதிய பாகிஸ்தான் மீண்டும் பாகிஸ்தான் சேர்த்துள்ளது. அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் வெறும் 9 ரன்கள் எடுத்தால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற இந்தியாவின் ரோஹித் சர்மா (4231) உலக சாதனையை உடைக்க பாபர் அசாமுக்கு (4223) வாய்ப்பிருந்தது. ஆனால் அந்த வாய்ப்பில் கோர்பின் போஸ்க் வேகத்தில் பாபர் அசாம் 2 பந்தில் டக் அவுட்டாகி ரோஹித் ரெக்கார்டை கோட்டை விட்டார்.
தென்னாப்பிரிக்கா வெற்றி:
அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் கம்பேக் மிகவும் சொதப்பலாக அமைந்தது. அடுத்து வந்த வீரர்களில் முகமது நவாஸ் மட்டுமே 36 ரன்கள் எடுத்தார். இறுதியில் 18.1 ஓவரில் பாகிஸ்தானை 139 ரன்களுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்கா 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவுக்காக அப்போரோச்சை மாத்த மாட்டோம்.. அவர் சவாலைக் கொடுத்தாலும் அடி உறுதி.. கேப்டன் மார்ஷ்
அத்துடன் ராவில்பிண்டி மைதானத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனையையும் தென்னாப்பிரிக்கா படைத்துள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கோர்பின் போஸ் 4, ஜார்ஜ் லிண்டே 3, லிசாத் வில்லியம்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். மறுபுறம் 2025 ஆசியக் கோப்பை தோல்வியிலிருந்து இன்னும் மீண்டெழாமல் பாகிஸ்தான் சொந்த மண்ணில் தோற்றது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.



