இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடிய உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் 2025 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அத்தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி ஆகஸ்ட் இரண்டாம் தேதி பர்மிங்காம் நகரில் நடைபெற்றது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி கண்ட பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க சாம்பியன்ஸ் அணிகள் மோதின.
அந்தப் போட்டியில் டாப் அதிர்ஷ்டத்தைப் பெற்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 195/5 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ஓப்பனிங் பேட்ஸ்மேன் சர்ஜில் கான் 76 (44) ரன்கள் குவித்து மிரட்டினார். மிடில் ஆடரில் உமர் அமீன் 36*, ஆசிப் அலி 28 ரன்கள் எடுத்து ஓரளவு கை கொடுத்தனர்.
டீ வில்லியர்ஸ் மாஸ் சதம்:
தென் ஆப்பிரிக்க அணிக்கு அதிகபட்சமாக வேன் பர்னல், வில்ஜோன் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்து விளையாடிய தென்னாபிரிக்க அணிக்கு கேப்டன் ஏபி டீ வில்லியர்ஸ் அதிரடியாக வெளுத்து வாங்கினார். ஏற்கனவே இத்தொடரில் 2 சதங்கள் அடித்து உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் அவர் பாகிஸ்தான் பவுலர்களை அசால்டாக அடித்து நொறுக்கி வெறும் 24 பந்தில் அரை சதத்தை பதிவு செய்தார்.
எதிர்புறம் மெதுவாக விளையாடிய ஹாசிம் அம்லா 18 (14) ரன்னில் விக்கெட்டை இழந்தார். ஆனால் அடுத்து வந்த ஜேபி டுமினி தம்முடைய பங்கிற்கு பாகிஸ்தான் பவுலர்களை வெளுத்து வாங்கினார். இந்தப் பக்கம் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு கருணை காட்டாமல் மாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய டீ வில்லியர்ஸ் 47 பந்தில் சதத்தை அடித்தார்.
தென்னாப்பிரிக்கா சாம்பியன்:
கடைசி வரை அவுட்டாகாத அவர் 12 பவுண்டரி 7 சிக்ஸருடன் 120* (60) ரன்கள் குவித்து அசத்தினார். இறுதியில் டுமினி அரை சதத்தை அடித்து 50* (28) ரன்கள் எடுத்ததால் 16.5 ஓவரிலேயே 197/1 ரன்களை எடுத்த தென்னாபிரிக்கா 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதனால் 2025 உலக சாம்பியன்ஷிப் லெஜெண்ட்ஸ் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை தென்னாப்பிரிக்கா வென்று சாதனை படைத்தது.
இதையும் படிங்க: 374 ரன்ஸ்.. 4, 4, 6.. 39 பந்தில் மாஸ் காட்டிய சுந்தர்.. ஓவலில் வரலாற்றின் சாதனை இலக்கை நிர்ணயித்த இந்தியா
கடந்த வருடம் இதே இங்கிலாந்தில் துவங்கப்பட்ட அத்தொடரின் முதல் சீசனில் பாகிஸ்தானை இறுதிப்போட்டியில் தோற்கடித்து இந்தியா கோப்பையை வென்றது. தற்போது அதே போல பாகிஸ்தானை ஃபைனலில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. ஏபி டீ வில்லியர்ஸ் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகத்தை வென்றார். மறுபுறம் பாகிஸ்தான் அணி அடுத்தடுத்த வருடங்களில் ஃபைனலில் தோற்று பரிதாபமாக வீட்டுக்கு கிளம்பியது.



