வெறும் 1 ரன்.. வெற்றியை நழுவவிட்டு அழுத நேபாள்.. த்ரில்லர் வெற்றியால் தெ.ஆ உலக சாதனை

- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஜூன் 15ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு செயின்ட் வின்சென்ட் நகரில் 31வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் தென்னாப்பிரிக்கா மற்றும் நேபாள் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நேபாள் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு குயிண்டன் டீ காக் 10 (11) ரன்னில் அவுட்டானார்.

அதைத்தொடர்ந்து வந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் 15 (22) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹென்றிச் க்ளாஸென் 3 (5) ரன்களில் நடையை கட்டினார். அடுத்த சில ஓவர்லே மறுபுறம் நங்கூரமாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் ரீசா ஹென்ட்ரிக்ஸ் முடிந்தளவுக்கு போராடி 43 (49) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

த்ரில் வெற்றி:
அடுத்ததாக வந்த டேவிட் மில்லர் 7 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 27* (18) ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவரில் தென்னாப்பிரிக்கா 115/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அற்புதமாக பந்து வீசிய நேபாள் சார்பில் திபேந்திர சிங் 3, குசால் புர்டேல் 4 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 116 ரன்களை துரத்திய நேபாளுக்கு குசால் புர்டேலை 13 (21) ரன்களை அவுட்டாக்கிய தப்ரிஸ் சம்சி அடுத்ததாக வந்த கேப்டன் ரோஹித் பௌடேலை டக் அவுட்டாக்கினார்.

இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ஆசிப் ஷேக் நிதானமாக விளையாடி வெற்றிக்கு போராடினார். அவருடன் அடுத்ததாக வந்து அதிரடியாக விளையாடி கை கொடுக்க முயற்சித்த அனில் ஷா 27 (24) ரன்களில் ஆட்டமிழந்தார். போதாக்குறைக்கு அதே ஓவரிலேயே மறுபுறம் வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆசிப் ஷேக் 42 (49) ரன்களில் சம்சி சுழலில் சிக்கினார்.

- Advertisement -

அடுத்ததாக வந்த கௌசல் மல்லாவும் 1 ரன்னில் ஆட்டமிழந்ததால் கடைசி ஓவரில் நேபாளுக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. ஓட்னெல் பார்ட்மேன் வீசிய அந்த ஓவரின் முதல் 2 பந்துகளில் ரன்கள் அடிக்காத குல்சன் ஜா 3வது பந்தில் பவுண்டரி அடித்து 4வது பந்தில் டபுள் எடுத்தார். அதனால் நேபாள் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5வது பந்தில் ரன் எடுக்காத அவர் கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்ட போது ரன் அவுட்டானார்.

அதனால் 20 ஓவரில் நேபாளை 114/7 ரன்களுக்கு கட்டுப்படுத்திய தென்னாப்பிரிக்கா வெறும் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதனால் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 2வது குறைந்தபட்ச இலக்கை (115) வெற்றிகரமாக கட்டுப்படுத்திய அணி என்ற உலக சாதனையை தென்னாப்பிரிக்கா படைத்தது. இதற்கு முன் 2014 டி20 உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக இலங்கை 120 ரன்கள் கட்டுப்படுத்தியதே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: விளையாடிய மழை.. உடைந்த பாபர் படையின் கனவு.. பாகிஸ்தானை வீட்டுக்கு அனுப்பிய அமெரிக்கா சரித்திர சாதனை

தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக தப்ரிஸ் சம்சி 3 விக்கெட்டுகள் எடுத்தார். மறுபுறம் போராடி கையில் வைத்திருந்த வெற்றியை கோட்டை விட்டதால் நேபாள் வீரர்களும் ரசிகர்களும் கண்ணீர் விட்டு அழுது சோகமடைந்தனர்.

Advertisement