
இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஷிப் லெஜெண்ட்ஸ் 2025 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் ஜூலை 31ஆம் தேதி பர்மியாம் நகரில் இரண்டாவது செமி ஃபைனல் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் முதலில் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிக்கு எதிராக பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி 20 ஓவரில் போராடி 186/6 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு கேப்டன் ஏபி டீ வில்லியர்ஸ் 6, சாரல் ஏர்வி 9, ஜேபி டுமினி 14, ஹென்றி டேவிட் 11, வேன் பர்னல் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் துவக்க வீரர் ஜேஜே ஸ்மட்ஸ் சிறப்பாக விளையாடி 57 (41) ரன்கள் குவித்தார்.
அதே போல வேன் விக் சரவெடியாக விளையாடி 7 பவுண்டரி 5 சிக்சருடன் 76 (35) ரன்கள் குவித்து அசத்தினார். ஆஸ்திரேலியா அணிக்கு அதிகபட்சமாக பீட்டர் சிட்டில் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு 45 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கிறிஸ் லின் 35 (20), ஷான் மார்ஷ் 25 (17) ரன்கள் குவித்து அவுட்டானார்கள்.
மிடில் ஆர்டரில் பென் டங் தடுமாறி 12 (11) ரன்னில் அவுட்டாக மறுபுறம் நிதானமாக விளையாடிய டார்சி சார்ட் 33 (29) ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பென் கட்டிங் 8 (8), காலும் பெர்குசன் 3 (3) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். இருப்பினும் டேனியல் கிறிஸ்டின் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடியதால் கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவுக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.
வேன் பர்னல் வீசிய அந்த ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்க விட்ட ராப் குவின்னி 2வது பந்தில் சிங்கிள் எடுத்தார். 3, 4வது பந்துகளில் கிறிஸ்டின் 2, 1 ரன் எடுத்தார். 5வது பந்தில் 1 ரன் எடுத்த குவின்னி தம்மால் ஃபினிஷிங் செய்ய முடியாது என்று நினைத்து ரிட்டயர்ட் அவுட்டாகி சென்றார். அதனால் கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது தூக்கி அடித்த கிறிஸ்டின் டபுள் ரன்கள் எடுக்க முயற்சித்த போது ஏபி டீ வில்லியர்ஸ் பந்தை அடுத்து ரன் அவுட் செய்தார்.
அதனால் 20 ஓவரில் ஆஸ்திரேலியாவை 185/7 ரன்களுக்கு சுருட்டிய தென்னாபிரிக்கா வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வென்று ஃபைனலில் பாகிஸ்தானை எதிர்கொள்ள தகுதிப் பெற்றது. ஐசிசி தொடர்களில் பலமுறை தங்களை நாக் அவுட் செய்த ஆஸ்திரேலியாவை இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா 1 ரன்னில் வீட்டுக்கு அனுப்பியது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.
இதையும் படிங்க: இதுக்காக எதுக்கு கம்பீர் கோபப்பட்டு அப்செட்டாகனும்.. இதெல்லாம் மறுபடியும் நடக்கும்.. வாழ்த்திய கங்குலி
அந்த அணிக்கு அதிகபட்சமாக வேன் பர்னல் 2, ஹர்டஸ் விஜோன் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். மறுபுறம் 2017 ஐபிஎல் ஃபைனலில் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது புனேவுக்காக ஃபினிஷிங் செய்யாமல் ஏமாற்றத்தை சந்தித்ததைப் போலவே இங்கேயும் 49* (29) ரன்கள் எடுத்தும் ஃபினிஷ் செய்யாததால் ஆஸ்திரேலியா 1 ரன் வித்தியாசத்தில் வெளியேறியது.